×

பண்ருட்டி ஒரு சில்லரை விஜய்க்கு தூரப்பார்வை வியாதி: அதிமுக எம்பி இன்பதுரை

1. அதிமுகவில் தொகுதி பங்கீட்டு இழுபறிக்கு காரணம் என்ன? அதிக தொகுதிகளை பாஜ கேட்டு மிரட்டுகிறதா? எதிர்பார்த்த கூட்டணி அமையாததால் பாஜ சொல்வதை கேட்கும் நிலைக்கு அதிமுக சென்று விட்டதா?
இது ஒரு புளித்த கேள்வி. அதிமுக தான் தமிழ்நாட்டின் கூட்டணிக்கு தலைமை வகிக்கிறது. எடப்பாடியார் தலைமையில் தான் அதிமுக ஆட்சி அமையும் என்பதை பல முறை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறோம். இதை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வழிமொழிந்துள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் தங்கள் கூட்டங்களில் சொல்லி உள்ளனர். நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து நானே பேசியுள்ளேன். முதலில் கூட்டணி அமைத்ததும் அதிமுக தான். அதிமுக கூட்டணி சரியாக அமைக்கவில்லை என்பது காமாலை நோய் உள்ளவர்களும், காதுகள் மரத்துபோனவர்களும் பேசுகின்ற பேச்சாகும்.

2. சசிகலாவின் புதிய பயணம் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும்?
அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்துகின்றோம் என்ற பேரில் கிளம்பியவர்கள் வாழ்வு தற்போது அரசியலில் சிக்கலாகி இருப்பதை தமிழகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. அரசியல் உலகம் பார்த்து கொண்டு இருக்கிறது. அதிமுக என்பது அழிக்க முடியாத சக்தி என்பது அனைவருக்கும் தெரியும். அது ஒரு அரசியல் இயக்கம் மட்டுமல்ல, வாழ்வியல் மார்க்கம்.அதிமுக பொதுச்செயலாளர் சொன்னது போல 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.

3. ஊழல் கட்சி என்று அதிமுகவை விஜய் கடுமையாக விமர்சிக்கிறாரே? திமுக, தவெக இடையே தான் போட்டி. அதிமுக, என்டிஏ கூட்டணி எல்லாம் போட்டியிலேயே இல்லை என்று சொல்கிறாரே?
கிட்டபார்வை, தூரப்பார்வை என்று உள்ளது. எனக்கு தெரிந்து விஜய்க்கு தற்போது வந்துள்ள வியாதி தூரப்பார்வை. அதாவது பக்கத்தில் உள்ளது தெளிவாக தெரியாமல் தூரத்தில் இருப்பது மட்டும் தெரியும். அவர் இந்த வார்த்தைகளை சொல்வதற்கு முன்பாக அக்கம் பக்கத்தில், தனக்கு பின்னால் இருப்பவர்களை பார்த்து பேசி இருக்க வேண்டும். விஜய் ஒரு அரசியல் குழந்தை. அவர் தற்போது அரசியல் பிள்ளைப்பிடிகாரர்களின் பிடியில் சிக்கி இருக்கிறார். தனக்கும் திமுகவிற்கும் போட்டி என்று அவர் மண்டையில் யாரோ சென்று எழுதி இருக்கிறார்கள். அதை அவர் பிரதிபலித்து கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் அவருக்கு மிக அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கும். திமுகவிற்கு எதிரான வாக்குகளை பிரித்து மீண்டும் திமுக ஆட்சியில் அமைவதற்கு முனைபவர்களுக்கு விஜய் துணை போகிறார்.

4. அதிமுகவிலிருந்து விலகி பண்ருட்டி ராமச்சந்திரன் தனியாக கட்சி தொடங்கியுள்ளாரே?
பண்ருட்டி ராமசந்திரன் ஒரு திராவிட குல்லுகபட்டர். அதிமுக எந்த விதத்திலும் ஆட்சியை பிடித்து விடக்கூடாது என்று நினைகின்றவர்களின் கை கருவியாக அவர் மாறியுள்ளார். தொடர்ந்து, அதிமுகவை சில்லரை தனமாக சேதப்படுத்தும் வேலைகளில் கடந்த 4 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அதில் அவர் தோல்விதான் அடைந்துள்ளார். எம்ஜிஆரால் ஏற்றம்பெற்றவர். அவர் உருவாக்கிய இயக்கத்தை அழிப்பதில் ஒரு ஆனந்தம் கொள்கிறார். எனவே, அவர் நவீன திராவிடத்தில் குல்லுகபட்டர்.

* திருப்பரங்குன்றம் கோயிலுக்கு மார்ச் 1ல் பிரதமர் வருகை
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1ம் தேதி பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்திற்காக வரும் பிரதமர் மோடி, மதுரையில் தனியார் ஓட்டலில் தங்குகிறார். அப்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கோயில் உள்பகுதியை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதே நேரம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜ போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Vijay ,AIADMK ,Inpadurai ,BJP ,Tamil Nadu… ,
× RELATED மாப்பிள்ளை ராயப்பேட்டை… ஆனா சட்டை...