- அஇஅதிமுக
- எடப்பாடி
- TTV
- OPS
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- சட்டமன்ற உறுப்பினர்
- போடி, தேனி மாவட்டம்
- தர்மயுத்தம்
- எம்.ஜி.ஆர்
- கோயம்புத்தூர்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், போடியில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: தர்மயுத்தம் நடத்தியபோது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கோவையில் நடத்தினேன் அப்போது கோவை மாநகரமே திரண்டு வரவேற்றது. மேடைக்குச் செல்லவே 45 நிமிடம் ஆனது. இதனை பார்த்து பயந்து போன அதிர்ச்சி அடைந்த அப்போது அதிமுக அமைச்சர்கள் மறுநாள் காலை 6 மணிக்கு எல்லாம் என்னை சந்தித்து கட்சியை இணைக்க வலியுறுத்தினர். முதல்வராக எடப்பாடியும், பொதுச்செயலாளராக நானும் தொடர வேண்டும் என்று கட்சியில் அப்போது இருந்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதால் ஏற்றுக் கொண்டேன். ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை எடப்பாடி உருவாக்கி இருவரும் கையெழுத்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
அன்றைய நிலையில் கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக ஏற்றுக் கொண்டேன். துணை முதல்வர் பதவியை ஏற்க விரும்பவில்லை. பிரதமர் கேட்டுக் கொண்டதால் ஏற்றுக் கொண்டேன். எனக்கு எந்த மரியாதையும் இல்லை இருந்தாலும் பொறுத்துக் கொண்டேன். எடப்பாடி முதல்வராக இருந்த 4 வருடம் முழு ஒத்துழைப்பை தந்தேன். இருவருக்கும் எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும், கட்சியும், ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்று பொறுமையாக இருந்தேன். இந்த பரபரப்பான சூழலில், அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் எடப்பாடியை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். பொதுக்குழுவில் கலந்து கொண்ட என் மீதும், ஆதரவாளர்கள் மீதும் தண்ணீர் பாட்டில் கொண்டு அடித்தனர். பன்னீர்செல்வம் அரசியலிலே இருக்க கூடாது என்று ஒவ்வொன்றாக செய்து முடித்தனர்.
தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டது. எங்களுக்கு அழைப்பு இல்லை. நாங்கள் அதிமுக தலைமை அலுவலகம் சென்று உட்காருவோம் என்று அங்கு சென்றோம். அங்கு எங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். இப்போதும் தலைமை கழகத்தை உடைத்துவிட்டார் ஓபிஎஸ் என்று எடப்பாடி கூறுகிறார். நான் அப்படி ஒரு காரியத்தை செய்வேனா? என்பதை தொண்டர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வான பிறகு ஒரு தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறவில்லை. இதனால்தான் அதிமுக கட்சி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றேன். எடப்பாடி அதை காதில் வாங்கவே இல்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உயிரை கொடுத்து காப்பாற்றிய கட்சி. அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் இணைய வேண்டும் என்று சொன்னேன். பொதுக்குழுவில் எம்ஜிஆர் வகுத்த விதியை மாற்றினார்கள். இதனை மாற்றக்கூடாது என சட்ட போராட்டம் நடத்தி வருகிறேன். இதனால் கட்சி கரை வேஷ்டி கட்டக் கூடாது; கொடி கட்டக்கூடாது என்று நீதிமன்றம் சென்றனர். நான் என்ன தவறு செய்தேன். நான் தவறு செய்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார். நான் டிடிவி.தினகரன் மேல் உயர்ந்த உட்சபட்ச மரியாதை வைத்திருக்கிறேன். அவர் பேசுவதற்கு மேலாக என்னால் பேசமுடியும். ஆனால், அரசியல் நாகரிகம் கருதி நான் பேசமாட்டேன். இவ்வாறு பேசினார்.
* தனிக்கட்சியா?
‘‘நான் ஏற்கனவே நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் மாதந்தோறும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவேன். அந்த கூட்டத்தில் கூறியிருக்கிறேன். எந்த நிலையிலும் நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்’’ என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
* விடிய, விடிய வற்புறுத்தியதால் எம்பி தேர்தலில் போட்டியிட்டேன்
‘‘அதிமுகவின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க தான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை உருவாக்கி இருக்கிறேன். அதுக்கு நான் உறுப்பினரே சேர்க்கவில்லை. சட்டப்போராட்டம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என அறிவித்தேன். 6 நாடாளுமன்ற தொகுதிகள் என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த 6 நாடாளுமன்ற தொகுதிகளில் இருக்கின்ற 36 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கின்ற தலைவர்களிடம் நீங்கள் போட்டியிடுகிறீர்களா என கேட்டேன். ஆனால், அவர்கள் பொருளாதார வசதிகள் இல்லை என்று பின்வாங்கிவிட்டனர். என்னை ராமநாதபுரத்தில் நிற்க சொன்னார்கள். அரசியல் நாகரிகம் கருதி, அப்படி கூறியவர் பெயரை சொல்லவில்லை. அவர்கள் என் வீட்டிற்கு வந்து, என் மகன்கள், மருமகள்களை வைத்துக் கொண்டு விடிய விடிய பேசி வற்புறுத்தியதின் பெயரில் தான் நான் ராமநாதபுரத்தில் போட்டியிட்டேன்’’ என்றார்.
* திமுக கூட்டணி உறுதியாக ஜெயிப்பாங்க என்றார் அமித்ஷா
‘திமுகவில் இணையபோகிறீர்களா’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ், ‘‘நீங்க தான் சொல்லிட்டு இருக்கீங்க. நீங்களே கேள்வி கேட்டுட்டு பதிலையும் நீங்களே எழுதுறீங்க. சட்டமன்ற பணி நிறைவடையும் போது, எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், முதலமைச்சரையும், சபாநாயகரையும் சந்தித்து நன்றி தெரிவித்து வருவார்கள். அந்த மாதிரி தான் நானும் இருவரையும் சந்தித்தேன். கட்சி பிளவுபட்டிருக்கிறது, மீண்டும் இணையணும்னு சொல்லி அமித்ஷா என்னை கூப்பிட்டாரு. அப்போது, ‘பன்னீர்செல்வத்திற்கு எந்த கமிட்மென்ட்டும் சொல்லமாட்டேன். அவரை என்னை வந்து பார்க்க சொல்லுங்க’ என்று சொன்னார். நானும் போய் சந்தித்தேன். இங்க இருக்கிற அரசியல் நிலவரம் குறித்து பேசினேன்.
அப்போது அவர், ‘‘பன்னீர்செல்வம் ஜி. நீங்களும், நானும் சேர்ந்து சொன்னோம். எடப்பாடி கேட்டாரா? இப்போ ஐந்து வருஷம் ஆட்சியை இழந்துட்டோம். அவங்க (திமுக) கூட்டணியை அப்படியே தக்க வச்சுக்கிட்டிருக்காங்க… கூட்டணியில இருந்து ஒரு ஆள் கூட வெளியேறாமல் இருப்பதால் அவங்க கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது. உறுதியாக அவங்க தான் ஜெயிப்பாங்க. நீங்க பிரிந்து இருக்கும்போது எப்படி ஜெயிப்பீர்கள் என்றார். அதற்கு, ‘நான் இணைய வேண்டும் என்று தான் நினைக்கிறேன். நீங்கள் கூப்பிட்டால் டிடிவி, சசிகலா வருவாங்க… நீங்கள் கூப்பிட்டீர்கள். நானும் வந்துட்டேன். கட்சியை இணைத்துவிடுங்கள் உங்களுக்கு பெரிய புண்ணியமா போகும் என கை எடுத்து கும்பிட்டேன்’’ என்றார்.
