×

41 பேர் பலியில் பழி போடுகிறார்களா? முதல்வர் பேசிய வீடியோ வைரல் போலி கண்ணீர் வடிக்கும் விஜய்: நெட்டிசன்கள் விளாசல்

முதல்வர் கனவில் அரசியலுக்கு வந்தவர் தான் நடிகர் விஜய். த.வெ.க. என்ற கட்சியை தொடங்கிய அவர், ஒவ்வொரு வாரம் இறுதி நாளில் சனி, அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பிரசாரத்தை நடத்தினார். அந்நாட்களில் தான், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் லீவில் இருப்பார்கள் என்பதால், கூட்டத்திற்கு வருவார்கள் என்பது அவரது திட்டமாக இருந்தது. ஆனால், ஒரு அரசியல் கட்சி, எவ்வாறு தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நடத்தியவர் தான் நடிகர் விஜய். அப்பாவி ரசிகர்களை அவர் எப்படி நினைத்து நடத்தினார் என்பதற்கு, அவர் காருக்குள் இருந்து லைட்டை போட்டு, போட்டு அணைத்து காட்டிய காட்சியே மிகச்சிறந்த உதாரணமாகும். அரசியல் கட்சியை தொடங்கி, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், ஒரு விரலை காட்டி முதல்வர் கனவில் தான், அவரது கார் கரூருக்கு புறப்பட்டு சென்றது.

கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு 7 மணியில் இருந்து 10 மணிக்குள் பிரசாரத்தை நடத்த காவல் துறையிடம் அனுமதி பெற்ற நடிகர் விஜய், பகல் 12 மணிக்கு வருவதாக கட்சியின் இணைய தளத்தில் பதிவிட்டார். இதனால் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், காலை 10 மணிக்கே அவரது ரசிகர்கள் திரண்டனர். குடிக்க தண்ணீர் வசதி கூட செய்யாத நிலையில், பசியால் ரசிகர்கள் தவித்து போனார்கள். கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு இரவு 7 மணிக்கு அவர் வந்தாலும், போலீஸ் அதிகாரிகள், வாகனத்தை நிறுத்துமாறு கூறிய எச்சரிக்கையை மீறிய நடிகர் விஜய், குறிப்பிட்ட இடத்தில் தான் நிற்பேன் என அடம் பிடித்து சென்றார். கூட்ட நெருக்கடியில் சிக்கி தவித்த ரசிகர்களை கண்டுகொள்ளாத காரணத்தால் தான், நெரிசலில் சிக்கி 41 ஏழை அப்பாவி ரசிகர்கள் உடல்நசுங்கி பலியானார்கள்.

இந்த அதிர்ச்சி தகவலை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனே சென்னையில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவில் திருச்சிக்கு ஓடோடி வந்து கரூர் சென்றார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தோருக்கு மனங்கசிந்து அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். ஆனால், 41 ரசிகர்களின் சாவுக்கு காரணமாக இருந்துவிட்டு, கொஞ்சமும் மனம் வருந்தாமல் சென்னைக்கு இரவோடு இரவாக தப்பி ஓடியவர் தான் நடிகர் விஜய். அதே சமயம், முதல்வரோ உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்ததுடன், நடிகர் விஜய் மீது எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார். ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலானய்வு விசாரணைக்கு நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், இந்த விசாரணை மீது நம்பிக்கை இல்லையென்று சிபிஐ சென்றது தவெக. சிபிஐ விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி முடித்து உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய விஜய், ‘நாங்கல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால், கரூர் சம்பவத்தில் என் மேல் ஏன் சார் பழியை தூக்கி போடுறீங்க.

மனசாட்சின்னு ஒன்னு இருந்த அப்படி பேசி இருப்பீங்களா. போற போக்குல பொய்ய அடிச்சு விடுறீங்க’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சும், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்க்கு ஆதரவாக முதல்வர் வெளியிட்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில், கரூரில் நடந்தது பெரும் துயரம். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும், தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்கள் தமிழ் உறவுகள். எனவே, சோகமும், பெருந்துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற நிலையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எத்தகைய பொறுப்போடு நடந்துக்கணும்னு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பது எல்லோருடைய கடமை. மனித உயிர்களே எல்லாத்துக்கும் மேலானது. மானுடர்பற்று அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள்ன்னு எல்லாத்தையும் விலக்கி வச்சுட்டு, எல்லாரும் மக்களின் நலனுக்காக சிந்திக்கணும்ன்னு கேட்டுக்கறேன். தமிழ்நாடு எப்போதுமே நாட்டுக்கு பலவகைகளில் முன்னோடியாகத்தான் இருந்து இருக்கு. இதுபோன்ற நிகழ்வுகள், இனி எந்த காலத்திலேயும் நடக்காம தவிர்க்க வேண்டியது நம்மளோட கடமை. நன்றி’ என்று முதல்வர் பேசி உள்ளார்.

அரசியல் நோக்கத்தோடு ஒருவர் மீது குற்றம் சொல்ல வேண்டாம் என்றதுடன், நீண்ட கால தீர்வை நோக்கி பயணிப்போம்’ என தெரிவித்து, துயரத்தில் இருந்த நாட்டு மக்களுக்கு ஆறுதலான வார்த்தையை தெரிவித்தார். இந்த வார்த்தையை கேட்டு நாடே, அவரை பாராட்டியது. ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உயர்ந்து நிற்பதாக கூறினர். நடிகர் விஜய் மீது எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்காமல், பண்பட்ட தலைவராக செயல்பட்டுள்ளார். ஆனால், தமிழகத்தை ஆண்ட பெண்மணி ஜெயலலிதாவாக இருந்திருந்தால், நடிகர் விஜய் கரூரை விட்டு வெளியே சென்றிருக்கவே மாட்டார்.

இந்நேரம் கம்பி எண்ணிட்டு இருந்து இருப்பாரு’ என அவரது கட்சியினரே இன்னும் கூறி வருகின்றனர். அதுபோன்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், எல்லோருக்குமான ஆட்சியை நடத்தி வருபவர் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், நடிகர் விஜய் நேற்று நடந்த கூட்டத்தில், கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு ஏன் என் மீது பழியை போட்டீர்கள்? என்ற கேள்வியை கேட்டு எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முழுக்க, முழுக்க நடிகர் விஜய் தான் காரணம் என ஊருக்கே தெரிந்திருந்தாலும், அவர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் என அரசியல் நோக்கர்கள் மட்டுமின்றி, அவரது ரசிகர்களே கருதுகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி அமைப்போம் வாருங்கள் என அவர் அழைத்தும், யாரும் செல்லவில்லை. தொகுதிக்கு 20 ஆயிரம் ஓட்டுகள் வரை கிடைக்கும் என்றாலும், அதை வைத்து ஒரு தொகுதியை கூட அவரால் ஜெயிக்க முடியாது என்பதால், 5 மாதத்திற்கு பிறகு திடீரென, ஏன் என் மீது பழியை போட்டீர்கள்? என்ற அழுகையை நடிகர் விஜய் கையில் எடுத்துள்ளார். படத்தில் நடிப்பதுபோல், உச்ச நடிகர் தனது திறமையை காட்டி ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்ததை ஸ்டார்ட், கேமரா, ஆக்‌ஷன் என சொல்லி போலி கண்ணீர் வடித்து இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகர்கோயில்
எடப்பாடி பழனிசாமி
(அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன்(பாஜ தலைவர்) மதுரை
பெ.சண்முகம்(சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) சென்னை
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்

Tags : Vijay ,K. ,Lee ,
× RELATED மாப்பிள்ளை ராயப்பேட்டை… ஆனா சட்டை...