×

இது எப்படி குமாரு! ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு இடத்தில் ஓட்டு சுரேஷ் கோபிக்கு வேட்டு

ஒன்றிய இணையமைச்சரான சுரேஷ் கோபி மலையாளப் படங்களில் நாயகனாக நடிப்பது போலவே அடிக்கடி சர்ச்சைகளின் நாயகனாக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் திருச்சூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்து கொண்டிருந்த போது ஒரு பெண் நிருபரின் தோளில் கைவைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசில் புகாரும் செய்யப்பட்டது. அடுத்த ஜென்மத்தில் நான் பிராமணனாக பிறந்து ஐயப்பனுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறியது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமாவில் நடிப்பது தான் முக்கியம் என்று கூறி பாஜ தலைமையின் வெறுப்பையும் சம்பாதித்தார்.

இப்படி எதையாவது பேசி பிரச்னையில் சிக்கும் சுரேஷ் கோபி, இப்போது வாயை திறக்காமலே அடுத்த வம்பில் சிக்கியுள்ளார். சுரேஷ் கோபி தன்னுடைய குடும்பத்தினருடன் கடந்த 30 வருடங்களாக திருவனந்தபுரம் சாஸ்தமங்கலம் என்ற பகுதியில் தான் வசித்து வருகிறார். இதனால் இவர் சாஸ்தமங்கலத்தில் உள்ள ஒரு பூத்தில்தான் கடந்த பல தேர்தலிலும் ஓட்டு போட்டு வந்தார். இந்நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென திருச்சூரில் ஓட்டு போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இவர் தன்னுடைய, மனைவி மற்றும் நெருங்கிய சில உறவினர்களின் ஓட்டை திருச்சூருக்கு மாற்றினார். அதன்பின் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவர் மீண்டும் திருவனந்தபுரத்தில் ஓட்டு போட்டார். இது எப்படி சாத்தியமாகும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இந்நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சுரேஷ் கோபியின் பெயர் குருவாயூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. குருவாயூர் கோயிலுக்கு அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முகவரி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது என்ன மாயாஜாலம் என தெரியவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் அக்கரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூலில், ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுரேஷ் கோபி திருச்சூரில் ஓட்டு போட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தில் ஓட்டு போட்டார். ஆனால் இப்போது இவரது பெயர் குருவாயூர் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளது. இது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை சுட்டிக்காட்டி சுரேஷ் கோபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

* புதுச்சேரியில் கிப்ட்டாக கொடுக்குறாங்க… தலைமை தேர்தல் அதிகாரியிடம் புலம்பிய அரசியல் கட்சிகள்
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் நகரப்பகுதியில் உள்ள 8 தொகுதிகளும் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக உள்ளன. இதன் காரணமாக இந்த தொகுதிகளை தேர்வு செய்துள்ள வேட்பாளர்கள் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாகவே பரிசு பொருட்களை இறக்கி விநியோகம் செய்து வருகின்றனர். வாட்டர் ஹீட்டர், வாட்டர் பியூரிபையர், சமையல் பாத்திரங்கள், எலக்ட்ரிக் ஸ்டவ், கெட்டில், குக்கர், புடவை, அரிசி என பரிசுப்பொருட்களை அள்ளி வீசி வருகின்றனர். இதற்கு நேர் எதிராக உள்ளது கிராமப்புற தொகுதிகள். இதுவரை வாக்காளர்களை கண்டுகொள்ளாத நிலைமை உள்ளது. உங்களுக்கு என்னப்பா, நகரப்பகுதி தொகுதி மாசத்துக்கு 3 பொருட்கள் கிடைக்கிறது. அதோடு அறக்கட்டளை என்ற பெயரில், அடையாள அட்டை போட்டு தேதி வாரியாக வாங்கிக்கொள்கிறீர்கள் என கிராமப்புற வாக்காளர்கள் புலம்புகின்றனர். இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஏற்பாடு குறித்து நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தேர்தல் அதிகாரியிடம் சில அரசியல் பிரமுகர்கள் வாக்காளர்களை கவருவதற்காக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பரிசு பொருட்கள் கொடுப்பது பற்றி புகார் தெரிவித்தனர்.

* காங்கிரஸ் vs முதல்வர்: அசாமில் அனல் பறக்கும் பாகிஸ்தான் பிரச்னை
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் அந்த மாநில பிரச்னை எடுபடுகிறதோ இல்லையோ, பாகிஸ்தான் பிரச்னை நன்றாக எடுபடுகிறது. அசாம் காங்கிரஸ் மாநில தலைவர் கவுரவ் கோகாயின் பிரிட்டிஷ் மனைவி எலிசபெத் கோல்பர்ன் மூலம் பாகிஸ்தான் தொடர்புகள் இருப்பதாக முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மாவும், பாஜவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தியாவின் உள் விவகாரங்களில் எலிசபெத் கோல்பர்னுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பாகிஸ்தானியர் அலி தவுகீர் ஷேக் தலையிட்டதாகக் கூறப்படும் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனது பாகிஸ்தான் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை மிகவும் முட்டாள்தனமானது மற்றும் போலியானது என்று கவுரவ் கோகாய் நிராகரித்தார்.

மேலும் தன் மீதான குற்றச்சாட்டு சி-கிரேடு சினிமாவை விட மோசமானது என்று தெரிவித்தார். இந்த அனல் பறக்கும் அரசியல் அமளிக்கு மத்தியில் அனைத்து நாடுகளுடன் நாடாளுமன்ற நட்பு குழுவை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அமைத்துள்ளார். இதில் பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற குழுவில் அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் இடம் பெற்றுள்ளார். கவுரவ் கோகாய், அவரது மனைவி எலிசபெத் கோல்பர்ன் ஆகியோரை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிவரும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நாடாளுமன்ற குழுவிலும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பதில் பாகிஸ்தான் நாட்டிற்கான குழுவில் கவுரவ் கோகாயை சேர்த்து இருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் பிலிப்பைன்சுடனான நாடாளுமன்ற நட்புக் குழுவிற்குப் பதிலாக ‘இந்தியா-பாகிஸ்தான்’ குழுவிற்கு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் . தவறுதலாக அவருக்கு இந்தியா-பிலிப்பைன்ஸ் குழு வழங்கப்பட்டுள்ளது. அவரை பாக். குழுவில் இணைத்து இருந்தால் அது நன்றாக வேலை செய்து இருக்கும்’ என்றார். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. அதில், ‘அசாம் முதல்வர் எங்கள் மாநில தலைவருக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். அவரை பாகிஸ்தான் முகவர் என்று சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டார். அசாம் மக்கள் சரியான நேரத்தில் முதல்வருக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள். அதுவரை, உண்மை அவரைத் தொடர்ந்து வேட்டையாடும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

* கேரளம் மட்டும் அனுமதி பங்களாவுக்கு இல்லையா? மோடிக்கு மம்தா கேள்வி
கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றக்கோரி முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அமைச்சரவை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது. இதை பரிசீலனை செய்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை அதற்கு அனுமதி அளித்து கேரளம் என்று அங்கீகரித்தது. இதே போல் மேற்குவங்க மாநிலத்தை பங்களா என்று மாற்ற மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து இருந்தது. பலமுறை நினைவூட்டியும் மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஆனால் கேரளம் என்று உடனே ஒப்புதல் தந்ததால் முதல்வர் மம்தா கடும் அதிருப்தி அடைந்தார்.

பிரதமர் மோடியை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி மம்தா கூறுகையில்,’ பாஜ மற்றும் மார்க்சிஸ்ட் இடையே ஒரு கூட்டணி வளர்ந்து வருவதால் கேரளாவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படுகின்றன. மேற்குவங்கம் ஏன் எப்போதும் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்? ஒரு நாள், நீங்கள் (பாஜ) ஆட்சியில் இருக்க மாட்டீர்கள். அப்போது நாங்கள் பெயரை மாற்றுவோம். பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் அத்தகைய திட்டங்களை அங்கீகரித்தவுடன் பல மாநிலங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. இருப்பினும், மேற்கு வங்கத்தில் அப்படி இல்லை. மேற்குவங்கத்தின் அதிகாரப்பூர்வ பெயரை ‘பங்களா’ என்று மாற்றுமாறு எனது அரசாங்கம் பலமுறை விடுத்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டினார்.

Tags : Kumaru ,Suresh Gopi ,Union Minister of State ,Thrissur ,
× RELATED அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை...