×

வாழ்வா… சாவா… தேர்தல்: ஆபரேஷன் விஐபி திட்டம்; பெண்களை கவர எடப்பாடி புது ஐடியா

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி மதுரை வரும் போது, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சசிகலா தனி கட்சி துவங்கி தேர்தலை சந்திக்க இருப்பது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மகளிர் உரிமை தொகை ரூ.5,000 பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்தில் திணறிக்கொண்டிருக்கிறார். அவரை பொறுத்தவரை இந்த தேர்தல் வாழ்வா, சாவா தேர்தலாகும். எனவே, எப்படியாவது இந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், ‘ஆபரேஷன் விஐபி திட்டம்’ அதிமுகவில் செயல்படுத்தப்பட உள்ளதாம்.

அது என்ன ‘ஆபரேஷன் விஐபி திட்டம்’ என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, அதிமுகவின் முக்கிய புள்ளிகள் போட்டியிடும் தொகுதிகள், அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகள், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் சேர்ந்து போட்டியிட இருக்கும் செங்கோட்டையன், அன்வர் ராஜா, வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் தொகுதிகளை குறித்து வேலை செய்ய இருக்கின்றனர். இந்த தொகுதிகளில் பெண்களை கவரும் வகையில் வீட்டுக்கு தேவையான பர்னிச்சர், வெள்ளி பாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர், பேன் என அனைத்து விதமான பொருட்களை பரிசாக கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அந்தந்த பகுதியில் உள்ள பிரபல, முக்கிய ஷோ ரூம்களை அணுகி ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே மக்களுக்கு பரிசு பொருட்களை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளில் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் களத்தில் இறங்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் ஒரு வீட்டுக்கு தலா ரூ.25,000 மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக திருச்சியில் உள்ள ஒரு பிரபல ஷோ ரூமில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் பரிசு பொருட்கள் ஒரத்தநாடு தொகுதியில் வழங்கப்பட உள்ளதாம். இதன்பிறகு மற்ற தொகுதிகளில் வழங்கப்படுமாம் என்றனர்.

* மாவட்ட தலைவரை பார்த்து நடுநடுங்கும் மாநில தலைவர்
தமிழக பாஜ மாநில பொது செயலாளராக இருப்பவர் கருப்பு முருகானந்தம். தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் பாஜ சார்பில் 2 முறை போட்டியிட்டு தோல்வியடைந்தவர். வரும் சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். தஞ்சாவூர் மாவட்ட பாஜ தலைவராக இருப்பவர் சதீஷ்குமார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் சதீஷ்குமார் நியமித்துள்ளார். தன்னை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நிர்வாகிகளை நியமித்துள்ளாக சதீஷ்குமார் மீது கடும் அதிருப்தியில் இருந்தாலும் வரும் தேர்தலில் உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்து விடுவாரோ என்ற அச்சத்தில் தற்போது கருப்பு முருகானந்தம் உள்ளாராம்.

இதுபற்றி தஞ்சாவூர் பாஜ வட்டாரத்தில் விசாரித்த போது, ‘மாவட்ட தலைவர் சதீஷ் குமார் பண வசதி கொண்டவர். கட்சிக்காக தாராளமாக செலவு செய்கிறார். வரும் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட சதீஷ்குமார் விரும்புகிறார். ஆனா, மாநில நிர்வாகி என்ற அடிப்படையில் கருப்பு முருகானந்தத்துக்கு எப்படியும் சீட் கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் சதீஷ் குமார் தயவு இல்லாமல், எதுவும் செய்ய முடியாது என்பது அவருக்கு தெரியும். அதனால் இவ்வளவு நாள் வீம்பாக இருந்தவரு தற்போது சதீஷ்குமாரிடம் திடீரென பாசம் காட்ட தொடங்கி இருக்கிறார்’ என்றனர்.

* சக்தியிடம் சொன்னால் சிவன் கேட்பாராம்: அன்புமணி மனைவியிடம் கெஞ்சிய மாஜி அமைச்சர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த 22ம் தேதி மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற மாநாடு திருப்பத்தூரில் பாமக சார்பில் நடைபெற்றது. அதற்காக அன்புமணி மனைவி சவுமியா கலந்து கொண்டார். அவருக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் சவுமியாவிடம், திருப்பத்தூர் தொகுதி பாமகவுக்கு தான் வேண்டும் என்று உங்கள் கணவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுள்ளார் என்று தகவல் வந்துள்ளது. சக்தியிடம் சொன்னால் தான் சிவன் கேட்பார். ஆகையால், நீங்கள் உங்கள் கணவர் அன்புமணியிடம் பேசி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மட்டும் அதிமுகவுக்கே ஒதுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டாராம்.

அதற்கு சவுமியா, நான் என் கணவர் சொல்லும் பேச்சை தான் கேட்பேன். வேறு யார் பேச்சையும் கேட்க மாட்டேன்னு தடாலடியாக பேசியதுடன் திருப்பத்தூர் தொகுதிய விட்டுத்தரவே முடியாது. அந்த தொகுதி பாமகவுக்கு தான் ஒதுக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு அந்த வேட்பாளரே வெற்றி பெறுவார் என்று சவுமியா கறாராக சொன்னதாக கட்சிக்குள்ள பேசிக்கிறாங்க. எப்படியும் திருப்பத்தூர் தொகுதிய கேட்டு வாங்கி அதிமுக போட்டியிட்டா தன்னோட அதிகாரத்தை நிலைநாட்டலாம்னு நினைச்ச வீரமணிக்கு சவுமியாவின் பதில் சவுக்கடியா இருந்துச்சாம். இதனால் மாஜி அமைச்சர் வீரமணி அப்செட்ல இருக்குறாராம். இந்த நோஸ் புரோக்கன் சந்திப்பு தான் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக, பாமக நிர்வாகிகளிடையே பரபரப்பு பேச்சாக போய்க்கிட்டிருக்குது.

* விஜய்க்கு ஓட்டு பெரிய ேநாய்: அதிமுக கிண்டல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட சேத்தியாத்தோப்பில் நடந்தது. இதில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பேசுகையில், ‘‘சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் பாடு பயங்கரமாக இருக்கிறது. காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு போ என்று சொன்னால், அவன் போகாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு எனக்கு ஒரு ஓட்டு போடு என்கிறான். 9 வயதிலேயே ஓட்டு கேட்கிறான். யாருக்கு ஓட்டு போட வேண்டும். யாருக்கு ஓட்டு கேட்கிறான் என்று கேட்டால் எங்கள் தலைவர் எவ்வளவு அழகாய் இருக்கிறார் பாருங்கள். அது ஒரு காரணம். இரண்டாவது காரணம் சூப்பராக டான்ஸ் ஆடுவாரு என்கிறான். அதற்காக ஓட்டு போடு என்கிறான்.

மக்களே பாருங்கள். இது எவ்வளவு பெரிய ஆபத்தாக, எவ்வளவு பெரிய நோயாக இந்த சமூகத்திலே வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று பேசுகின்றவர்களை பார்த்து நாம் கேட்கின்றோம். கொஞ்சமாவது சிந்தித்துப் பார். மனதில் அறிவு இருந்தால் யோசித்துப் பார். திரையில் நடித்துக் கொண்டிருக்கிற ஒருவன் திரையில் நடனமாடிக் கொண்டிருக்கின்ற ஒருவன் அவன் அழகாக இருக்கிறான் என்பதற்காக, எந்த மக்கள் பிரச்னைக்கும் எப்போதும் களத்திற்கே வராதவன் திடீரென்று வந்து எனக்கு ஓட்டு போட்டு விடு என்று களத்திலே நின்றால், அவனைப் பார்த்து இது மாற்றம் என்கிறாயே? இதுவா மாற்றம்?’’ என்று கூறினார்.

Tags : Edappadi ,Tamil Nadu Assembly elections ,AIADMK ,National Democratic Alliance ,Modi ,Madurai ,
× RELATED அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை...