×

கூட்டணிக்கு அழைத்த எடப்பாடியை வெளுத்து வாங்கிய ராமதாஸ்: முதல்ல ஏன் என்கிட்ட வரல… அன்புமணிய ஏன் சேர்த்தீங்க… நீங்கள் ஒரு துரோகிதான்! ஆபர் கொடுத்து ப்ளீஸ் பண்ணும் அமித்ஷா

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜ பக்கம் ஓடியது. இதில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்த நேரத்தில் தான் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. வருகிற தேர்தலில் எனது தலைமையில் தேர்தலை சந்திக்கலாம் என தந்தை கேட்க, முடியவே முடியாது எனது தலைமையில் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என கூறியதுடன், பனையூரில் இருக்கும் ஆபீசுக்கு வருமாறு கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார் மகன் அன்புமணி. அதே வேகத்தோடு கட்சியின் சின்னமும், தலைவரும் நான் தான் என தேர்தல் ஆணையத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி விட்டார் என்ற குற்றச்சாட்டையும் எதிர்தரப்பினர் கூறிவருகின்றனர்.

இதோடு நிற்காமல், பாஜ மூலமாக அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத தந்தை ராமதாஸ் தரப்பினரோ கடும் அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள நிலையில் சரியான கூட்டணி கிடைக்காமல் திரிசங்கு நிலையில் தவித்து வருகின்றனர். தந்தையுடன் இருக்கும் சிலரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான் அன்புமணியின் தலையாய கடமையாக இருந்து வருகிறது. தந்தைக்கே துரோகம் செய்தவர் என அந்த சமுதாய மக்களிடையே பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டை கூறி வருவதால் கடும் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டதுடன் தூக்கமில்லாமல் தவித்து வருகிறார் அன்புமணி.

இந்த நிலையில் பாஜ கூட்டணிக்குள் ராமதாசையும் கொண்டு வர முயற்சிகள் நடந்த நிலையில் அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டார். ஆனால் தற்போதுள்ள நிலையில் ராமதாசையும் கூட்டணிக்குள் கொண்டு வர உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக 2 முறை ராமதாசை தொடர்பு கொண்டு போதிய தொகுதிகளை கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை. எனினும் ராமதாஸ் தரப்பிடம் குறிப்பிட்ட ஓட்டுக்கள் இருப்பதால், எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தந்தையும் மகனும் நெருங்கி வருவதாக பாமக வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

அதேநேரத்தில் இலைக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது ராமதாஸ் கடும் கோபத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. பாஜ, அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு முன்னோட்டமாக எடப்பாடியுடன் ராமதாசை பேச வைக்கும் முயற்சி நடந்தது. இதில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் ஈடுபட்டார். அதன்படி செல்போன் இணைப்பு கொடுத்தவுடன், எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் கடும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. “ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின்போதும் எடப்பாடியில் ஜெயிக்க வைத்தேன். ஆனால் என்னிடம் கேட்காமல் அன்புமணியை கூட்டணியில் சேர்த்தது ஏன்? முதலிலேயே என்னிடம் ஏன் வரவில்லை.

ஏன் என்னிடம் பேசவில்லை. எல்லோரும் துரோகி என்றார்கள். அப்போது நான் நம்பவில்லை. ஆனால் அப்படித்தான் போல தெரிகிறது?’ என மிகுந்த கோபத்துடன் பேசியுள்ளார். பாஜ சொல்லிதான் அன்புமணி என்னுடன் சேர்ந்தார் என கூறி எடப்பாடி பழனிசாமி சமாளித்துள்ளார். மிகப்பெரிய கட்சி தலைவராக இருக்கும் தன்னை ராமதாஸ் இவ்வாறு பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தன்னை அவமானப்படுத்தி விட்டதாக அவர் மிகுந்த சோகம் அடைந்தார். இதனை அறிந்தே பாமக அருள் எம்எல்ஏ, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து சமாதானம் செய்துள்ளார்.

* விஜய்லாம் பத்தி பேசணுமா? நயினார் சலிப்பு
சென்னையில் உள்ள பாஜ அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: கரூர் எம்பி ஜோதிமணியை விமர்சித்த கரூர் மாவட்ட பாஜ தலைவர் ஜாமீன் வாங்கிய விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம். தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன். அதுபோன்று தவறு செய்தவர்கள் பாஜவினர்னு தெரிந்தால் அவர் மீது நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க எடுப்போம்.
பாஜ, அதிமுக கூட்டணி தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை.

யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பதை விரைவில் சொல்கிறோம். விஜய்யைப் பற்றிப் பேசி ரொம்ப பெரிய ஆளாக்க விரும்பவில்லை. பிரதமர் மோடி கலந்துகொண்ட மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமே மாநாடு போல நடந்தது. ஐந்து மைலுக்கு வாகனங்கள் நின்றதை பார்க்க முடிந்தது. அதையும் தாண்டிய எழுச்சி மதுரையில் வரும் 1ம் தேதி நடைபெறுகிற கூட்டத்தில் இருக்கும். அதனைத் தொடர்ந்து, 11ம் தேதி திருச்சியிலும் பிரமாண்டமாக நடைபெறும். ஐந்து லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ramadoss ,Edappadi ,Anbumania ,Amit Shah ,PMK ,AIADMK ,BJP ,Anbumani ,
× RELATED மாப்பிள்ளை ராயப்பேட்டை… ஆனா சட்டை...