×

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: தமிழக சட்டப்பேரவையில் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரநிதித்துவம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

செஞ்சாரு: மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிப்பதற்காக ஏப்ரல் 2025ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாக்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதன்பின் ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அரசாணை கடந்த 2025 ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டன. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதனை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பை சேர்ந்த ஒரு பிரதிநிதியும் இடம் பெற்றுள்ளார். இக்குழு விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியானவர்களைத் தேர்வு செய்யும்.

மேலும், நியமிக்கப்படும் உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் பங்கேற்கலாம். இவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இணையான மதிப்பூதியம் மற்றும் படிகள் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சேர்த்து 13,357 மாற்றுத்திறனாளிகளை நியமிக்க அரசு இலக்கு நிர்ணயித்தது. அதில், முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 நபர்களும், ஊரக உள்ளாட்சிகளில் 2,984 நபர்களும் என மொத்தம் 3,634 உறுப்பினர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 2025 நிலவரப்படி, எஞ்சியுள்ள சுமார் 9,000 இடங்கள் விரைவில் நிரப்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை சலுகை பெறுபவர்களாக மட்டுமே இருந்த மாற்றுத்திறனாளிகள், இப்போது முடிவெடுக்கும் அதிகாரத்தில் பங்கேற்பதை ஒரு மைல்கல்லாக பார்க்கின்றனர். உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம், பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளங்கள், கழிவறைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை நேரடியாக வலியுறுத்த முடியும் என நம்புகின்றனர். முதல்வரின் இந்த அறிவிப்பை மாற்றுத்திறனாளிகள் ‘இது வெறும் நியமனம் மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் குரல் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு’ என வரவேற்றுள்ளனர்.

எந்தெந்த பதவிகளுக்கு நியமனம்
* மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர்.
* ஒவ்வொரு மாவட்ட ஊராட்சிகளிலும் ஒரு உறுப்பினர் (மொத்தம் 37 இடங்கள்)
* ஒவ்வொரு மாவட்ட ஒன்றியத்திலும் ஒரு உறுப்பினர் (மொத்தம் 388 இடங்கள்)
* தமிழகத்தில் உள்ள 12,525க்கும் மேற்பட்ட ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுவர்.

அதிக உறுப்பினர்கள் கொண்ட மாவட்டங்கள்
* திருவண்ணாமலை மாவட்டம்: தமிழகத்திலேயே அதிகப்படியான கிராம ஊராட்சிகளை (860 ஊராட்சிகள்) கொண்ட மாவட்டம் என்பதால், இங்குதான் அதிக எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
* தஞ்சாவூர் மாவட்டம்: அடுத்தபடியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் (589 ஊராட்சிகள்) அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* விழுப்புரம் – செங்கல்பட்டு: மாவட்ட பிரிப்பிற்குப் பிறகும் இவ்விரு மாவட்டங்களிலும் கணிசமான இடங்கள் உள்ளன.

* செத்த அப்போ எட்டி பார்க்கல… கிராமம் கிராமமா போவாரா? வேல்முருகன் ரோஸ்ட்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: திமுக தலைமையிலான கூட்டணியில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. எனது திட்டமிட்ட பயணங்கள் முடிந்தபின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவோம். இதில் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். விஜய் தன்னை காண வந்தவர்களில் பலர் இறந்தபோது கூட அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்திக்கச் செல்லாத நிலையில், ஆட்சிக்கு வந்த பின்பு கிராமம் கிராமமாக மக்களை சந்திப்பேன் எனக் கூறுவது தமிழர்களை அவர் குறைத்து மதிப்பிடுவதையே காட்டுகிறது. உண்மை நிலையை மறைத்து மக்களின் கவனத்தை ஈர்க்க விஜய் தவறான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். பாஜ தமிழகத்தில் வளரவில்லை என பிறர் கூறுவதில் இருந்து நான் மாறுபடுகிறேன். எனவே மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு: எந்த சிக்கலும் இருக்காது; திருமாவளவன் உறுதி
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் கருணைத்தொகை ரூ.10,000 வழங்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். திமுகவுக்கு எதிராக அதிமுக அறிவித்திருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே தேர்தலில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தவெக தலைவர் விஜய் யார் கூறுவதையோ, எழுதிக்கொடுப்பதையோ பேசுகிறார். கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை விஜய்க்கு அஜெண்டாவாக உள்ளது திமுக எதிர்ப்பு மட்டும் தான். செயல் திட்டம் என்ன, யாருக்காக கட்சி தொடங்கினார், எந்த இடத்தை நோக்கி விஜய் பயணிக்கிறார் என தெரியவில்லை.

இதுவரை அரசியல் களத்தில் இருக்கிற என்னை போன்றோர் புரிந்து கொள்ள முடியவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். தொகுதியை பொறுத்தவரை அதனை தற்போது கூற முடியாது, பார்க்கலாம். எது எப்படி இருந்தாலும் எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லாதவாறு பார்த்து கொள்வது எங்களுக்கான பொறுப்பு, கடமை, விமர்சனம் இருக்கலாம். திமுக கூட்டணி கட்டுக்கோப்பா இருக்கும். தொகுதி பங்கீட்டால் எந்த சிக்கலும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால் வரவேற்பேன்
‘ஓ.பன்னீர்செல்வம் மிகவும் உறுதியானவர், சகிப்புத்தன்மை உள்ளவர், சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் அவரிடத்தில் உண்டு. விட்டு கொடுத்து போகும் இடத்தில் அவர் இருக்கிறார். அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்து கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏன் முன்வரவில்லை என்று விளங்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால் நான் வரவேற்பேன்’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Tags : Sonnaru ,Sencharu ,Tamil Nadu Legislative Assembly ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,
× RELATED அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை...