×

அதிமுக எம்பிக்கு பாமக எம்எல்ஏ சிபாரிசு: ஓட்டுக்கு இப்பவே ‘ஐஸ்’

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவை சேர்ந்த சிவக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான அவ்வையார்குப்பம் உள்ளது. விழுப்புரம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த சி.வி.சண்முகம், கடந்த முறை தோற்றதால் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.

வரும் தேர்தலில் மீண்டும் விழுப்புரத்தில் போட்டியிட்டால் தோல்வி அடையலாம் என்பதால், மயிலம் தொகுதியை குறி வைத்து விருப்ப மனு அளித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளார். சி.வி.சண்முகத்தின் ஆசியோடு கடந்த முறை சிவக்குமார் வென்றதால் தற்போது மயிலம் தொகுதியை விட்டு தந்து விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட அவர் முன்வந்து உள்ளார்.

5 ஆண்டுகள் எம்எல்ஏ பதவி நிறைவுபெறும் நிலையில் கடைசி கூட்டத்தொடரில் அதிமுக மாஜி அமைச்சர் சி.விசண்முகத்தின் சொந்த ஊரான அவ்வையார்குப்பம் ஊராட்சிநடுக்குப்பத்தில் 140 குடும்ப அட்டைதாரர்கள் இருப்பதால் அவர்களுக்கு தனியாக பகுதிநேர ரேஷன்கடை அமைக்கவேண்டும் என்று பாமக எம்எல்ஏ சிவக்குமார் பேரவையில் முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தார் சி.வி. சண்முகம்.

ஏற்கனவே திண்டிவனம், விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற்று வணிகவரி, பள்ளிக்கல்வி, நீதிமன்றம், சிறைத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர். அதிமுக ஆட்சியில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் இருந்தவர். அப்போதெல்லாம் தன் சொந்த ஊருக்கு ரேஷன்கடை கொண்டுவரவில்லை. ஆனால் பாமக எம்எல்ஏ தற்போது முதலமைச்சரிடம் ரேஷன்கடை கேட்டுள்ளார்.

சிவக்குமார் எம்எல்ஏ தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடம் மாறுவதால், மயிலத்தில் தன்னை வெற்றி பெற வைத்ததுபோல் விக்கிரவாண்டியிலும் அதிமுகவினர் ஆசியோடு வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதற்கு மாஜி அமைச்சரின் ஊருக்கு ரேஷன் கடைகேட்டு அதிமுகவின் ஓட்டுக்கு இப்பவே ஐஸ் வைத்திருக்கிறாராம். பாமகவின் ஓட்டுவங்கி அதிகம் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுக வாக்குகள் கிடைத்தாலே எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று வெற்றி கனவில் தற்போதே மிதக்கிறாராம்.

Tags : PMK MLA ,AIADMK ,Sivakumar ,PMK ,Mayilam ,Villupuram district ,Avvaiyarkuppam ,minister ,C.V. Shanmugam ,MLA ,Villupuram ,
× RELATED திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி...