×

வாகனங்கள் செல்வதற்கான பாதை அமைக்க அளவீடு பணி ரயில்வே அதிகாரிகளை பொதுமக்கள் திடீர் முற்றுகை

நெல்லிக்குப்பம், பிப். 19: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு சுல்தான்பேட்டை, அவுலியா நகர், ஷர்பியா நகர் பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் வழியில் குறுக்கே ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. ரயில்வே கேட்டை கடந்து செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிலையம் விரிவுபடுத்தப்பட்டபோது சுல்தான்பேட்டை ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாதையாக மாற்றப்பட்டது.

அப்போது சுரங்கப்பாதையில் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறு வாகனங்கள் வந்து செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அப்போதைய திருச்சி மண்டல ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகள் செவி சாய்க்காமல் நிராகரித்து இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் படிக்கட்டுகளில் மக்கள் நடந்து செல்லும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையின் வழியாக ஆட்டோ, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆலை ரோடு வழியாக சுற்றி செல்லும் நிலை உள்ளது. இது குறித்து விஷ்ணு பிரசாந்த் எம்பி, ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறை அமைச்சரிடமும் மாற்று சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதன் பேரில் நேற்று ரயில்வே துறை சென்னை உதவி பொறியாளர் புவனேஸ்வரன், மயிலாடுதுறை ரயில்வே கோட்ட மேலாளர் மகேந்திரன், கோட்ட உதவி ஆய்வாளர் சரவணமுத்து, நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன் ஆகியோர் சுரங்கப்பாதை படிக்கட்டை அகற்றி வாகனங்கள் சென்று வரும் விதமாக மாற்றி அமைக்க அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் பணி மேற்கொண்டால் எங்களது வீடுகள் பாதிக்கப்படும், வீட்டிலிருந்து வெளியே வர கஷ்டமாக இருக்கும் எனக் கூறி ரயில்வே துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி கலந்தாய்வு கூட்டம் நடத்தி முடிவு எடுத்த பின்னர் சுரங்கப்பாதை சீரமைப்பு செய்வதற்கான அளவீடு செய்யும் பணி தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Nellikuppam ,Sultanpet ,Aulia Nagar ,Sharbiya Nagar ,Ward 23 ,Nellikuppam Municipality ,Cuddalore district ,
× RELATED காரியாபட்டியில் திறப்பு ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்