அரியானா: அரியானாவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை அமைச்சர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநில கேய்தல் பகுதியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றார்.
அப்போது ஒரு மோசடி புகார் குறித்து ஏஎஸ்ஐ அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டார். ஆனால் அந்த அதிகாரி குருக்ஷேத்ரா மாவட்டத்தில் பணியாற்றுவதால் அவரை சஸ்பெண்ட் செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும், டிஜிபிக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் பெண் போலீஸ் எஸ்பி உபாசனா சட்ட ரீதியான விளக்கத்தை கூறினார். இதனால் கோபமடைந்த அமைச்சர், ‘உனக்கு அதிகாரம் இல்லை என்றால் இங்கிருந்து வெளியே போ’ என்று ஒருமையில் பேசி மிரட்டியதுடன் ‘எனது உத்தரவு அரியானா மாநிலம் முழுவதும் செல்லும்’ என்று ஆவேசமாக கத்தினார்.
பின்னர் தனது உத்தரவை டிஜிபிக்கு முறைப்படி தெரிவிக்குமாறு அங்குள்ள போலீசாருக்கு அவர் ஆணையிட்டார். ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான புகாரின் போது பெண் எஸ்பி சங்கீதா காலியாவுடன் அமைச்சர் அனில் விஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை ‘வெளியே போ’ என்று ஆவேசமாக கூறியதால் அந்த பெண் அதிகாரி அங்கிருந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த பழைய அதிகார மோதல் சம்பவம் தற்போது மீண்டும் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் நடந்த மோதலால் சமூக வலைதளங்களில் பலராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது.
