×

ராகுலுக்கு பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை அமெரிக்காவிலிருந்து பருத்தி இறக்குமதி செய்து ஜவுளியாக ஏற்றுமதி செய்தால் வரி இல்லை: ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தத்தின் மூலம் இந்திய ஜவுளித்துறை மற்றும் பருத்தி விவசாயிகள் ஒன்றிய பாஜ அரசு ஏமாற்றியிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், இது குறித்து ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் விரக்தி அடைந்துள்ளது. மோடி அரசை விமர்சிக்க எதுவும் கிடைக்காததால் அவர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். ராகுல் காந்திக்கு பொருளாதாரம் குறித்து எந்த புரிதலும் இல்லை. புரிந்து கொள்ளும் பக்குவமும் அவருக்கு இல்லை. இதுபோன்ற முதிர்ச்சியற்ற தலைவர்கள் அரசியலுக்கு வரும் போது, குற்றச்சாட்டுகளின் நிலை இப்படித்தான் இருக்கும். ராகுல் காந்தி உண்மையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருக்கிறார். அவர் தவறான தகவல்களை மட்டுமே சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.

தற்போதைய ஒப்பந்தங்களால் இந்தியாவின் பருத்தி சாகுபடி திறன் மற்றும் தேவை இரண்டும் வளரும். நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஜவுளித்துறை ரூ.3.6 லட்சம் கோடி பங்களிப்புடன் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது வரும் காலத்தில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும். கடந்த சில மாதங்களில் இந்தியா செய்துள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம், சுமார் ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான ஜவுளிச் சந்தை நமக்காக திறக்கப்பட்டுள்ளது. இது நமக்கு நிச்சயம் பலனளிக்கும். அமெரிக்கா மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.9 லட்சம் கோடி மதிப்புள்ள ஜவுளிப் பொருட்களை கொள்முதல் செய்கிறது.

மேலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்த ஏற்றுமதியில் தோராயமாக பாதி பூஜ்ஜிய வரியில் இருக்கும். மீதமுள்ளவைகளுக்கு 18 சதவீத வரி இருக்கும். இது வேறு எந்த போட்டி நாட்டுடனும் ஒப்பிடும்போது மிகக் குறைவு. மேலும் அமெரிக்கா உடனான ஒப்பந்தம் இந்தியாவிற்கு 30 டிரில்லியன் டாலர் சந்தையைத் திறந்துள்ளது. இது இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவிலிருந்து சுமார் ரூ.22-23 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை கொள்முதல் செய்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற சந்தைகளுக்கு வரியின்றி ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 480 மில்லியன் பேல் பருத்தியை உற்பத்தி செய்கிறது. இதன் மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடி. இதனால், இந்தியாவின் பருத்தி விவசாயிகளின் நலன்களுக்கு சேதம் விளைவிக்க முடியாது. அமெரிக்கா சுமார் ரூ.45,000 கோடி மதிப்புள்ள பருத்தியை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் ஒரு பிராந்தியம் மட்டுமே இதை விட அதிகமாக பருத்தியை உற்பத்தி செய்கிறது. மொத்த அமெரிக்க பருத்தி உற்பத்தி இந்தியாவின் பருத்தித் தேவையில் 10 சதவீதம் கூட இல்லை.

நாட்டின் பருத்திக்கான தேவை அதிகரித்தும் வருகிறது. வங்கதேசத்தை போல, இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிலிருந்து பருத்தி அல்லது நூலை வாங்கி, அதை இந்தியாவில் பதப்படுத்தி, முடிக்கப்பட்ட பொருட்களை அமெரிக்காவிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்தால், அவர்களும் வரி இல்லாத சலுகைகளைப் பெறலாம். இது புதியதல்ல. உலக வர்த்தகத்ததில் பல ஆண்டாக கடைபிடிக்கப்படும் நடைமுறை.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறி உள்ளார்.

* ரூ.45 லட்சம் கோடி வர்த்தகம் சாத்தியம்
அமெரிக்காவுடன் 2030க்குள் ஆண்டுக்கு ரூ.45 லட்சம் கோடி வர்த்தகம் செய்வது குறித்து பியூஷ் கோயல் கூறுகையில், ‘‘இந்தியா உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடு. நமது எரிசக்தி தேவை ஆண்டுக்கு 7 சதவீதம் அதிகரிக்கிறது. இந்திய ஐடி சேவையின் ஏற்றுமதி ரூ.18 லட்சம் கோடியாக உள்ளது. இதுவே ரூ.45 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இத்துறைக்கு தேவையான நவீன உபகரணங்கள் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படுகின்றன. சமையல் நிலக்கரி ரூ.1.50 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இது ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்கும். எனவே, அனைத்தின் தேவை அதிகரிக்கும் போது ரூ.45 லட்சம் கோடி வர்த்தகம் சாத்தியமாகும். பொருட்களை வாங்க நிறைய நாடுகள் கிடைப்பதால் இறக்குமதி பொருட்களை பேரம் பேசி வாங்கவும் முடியும்’’ என்றார்.

* பருத்தி விவசாயிகள், ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஏமாற்றும் அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடெல்லி: இந்திய-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாட்டில் விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை அரசு ஏமாற்றுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்தியா -அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்த ஒப்பந்தம் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதி என இரு துறைகளிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நாம் அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்தால் நமது சொந்த விவசாயிகள் அழிந்து போவார்கள். நாம் அதை இறக்குமதி செய்யாவிட்டால் நமது ஜவுளித் தொழில் பின்தங்கி அழிந்துவிடும். ஜவுளித் தொழில் மற்றும் பருத்தி விவசாயம் இந்தியாவின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன.

கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவு இந்த துறைகளைச் சார்ந்துள்ளது. இந்த துறைகளை தாக்குவது என்பது மில்லியன் கணக்கான குடும்பங்களை வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடியின் குழிக்குள் தள்ளுவதாகும். தேசிய நலனில் சிந்திக்கும் ஒரு தொலைநோக்கு அரசாங்கம் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருவரின் செழிப்பையும் பாதுகாக்கும் மற்றும் உறுதி செய்யும் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும். ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. நரேந்திர சரண்டர் மோடியும் அவரது அமைச்சர்களும் இரு துறைகளிலும் ஆழமான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rahul ,US ,Union Commerce Minister ,Piyush Goyal ,Mumbai ,Former ,Congress ,president ,Rahul Gandhi ,BJP government ,India ,Union Commerce and Industry ,Minister ,
× RELATED அசாமில் ரூ.18,662 கோடி செலவில்...