ஜபல்பூர்: நீட் தேர்வில் வெற்றி பெற்றும் எம்பிபிஎஸ் கிடைக்காத காரணத்தில் மபி மாணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைனில் ஆஜராகி தனக்கான நீதியை பெற்றுள்ளார். மத்திய பிரதேசம், ஜபல்பூரை சேர்ந்த மாணவர் அதர்வா சதுர்வேதி (19).இவர் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 530 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின்(ஈடபிள்யூஎஸ்) கீழ் தனியார் கல்லூரிகளில் இடம் கோரிய போது, அதற்கான முறையான கொள்கையை மாநில அரசு அமல்படுத்தாத காரணத்தால் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.
அதே போல் இரண்டு முறை தேர்ச்சி பெற்று 530 மதிப்பெண்களைப் பெற்றார். இருந்த போதிலும், மாநிலத்தின் இடஒதுக்கீடு கட்டமைப்பு தனியார் நிறுவனங்களுக்கு ஈடபிள்யூஎஸ் கொள்கையை விரிவுபடுத்தாததால், தனியார் கல்லூரிகளில் அந்த ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் சீட் பெற முடியவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் அவரே நேரில் ஆஜராகி வாதாடிய போது, ‘நீ ஒரு சிறந்த வக்கீலாக வருவாய்’ என்று நீதிபதி பாராட்டியும் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. தனது மருத்துவக் கனவை கைவிடாத அதர்வா சதுர்வேதி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நேற்று முன்தினம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் ஆஜராகி தானே வாதாடினார்.
எந்த ஒரு மூத்த வக்கீலின் உதவியும் இன்றி, இணையதளம் வாயிலாக மனு தாக்கல் செய்து 10 நிமிடங்கள் அவர் முன்வைத்த தெளிவான வாதங்களை கேட்ட நீதிபதிகள் வியப்படைந்தனர். அரசியல் சாசனத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி அவருக்கு ஆதரவாக அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ‘தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்ற காரணத்தை கூறி தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்க முடியாது’ என்று தெரிவித்தனர். மேலும் 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் படிப்பில் அதர்வாவிற்கு தற்காலிகமாக இடம் வழங்க ஒன்றிய அரசுக்கும் மற்றும் மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
