×

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காததால் சுப்ரீம் கோர்ட்டில் தானே வாதாடி வெற்றி பெற்ற ஏழை மாணவன்: மருத்துவ கனவு நனவாக அதிரடி உத்தரவு

ஜபல்பூர்: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத மாணவர் உச்ச நீதிமன்றத்தில் தானே வாதாடி தனக்கான நீதியை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த மாணவர் அதர்வா சதுர்வேதி (19), பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மருத்துவ படிப்பில் சேர விரும்பினார். இதற்காக கடந்த 2024ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 530 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் இடம் கோரிய போது, அதற்கான முறையான கொள்கையை மாநில அரசு அமல்படுத்தாத காரணத்தால் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் அவரே நேரில் ஆஜராகி வாதாடிய போது, ‘நீ ஒரு சிறந்த வக்கீலாக வருவாய்’ என்று நீதிபதி பாராட்டியும் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. தனது மருத்துவக் கனவை கைவிடாத அதர்வா சதுர்வேதி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நேற்று தலைமை நீதிபதி முன்னிலையில் தானே வாதாடினார். எந்த ஒரு மூத்த வக்கீலின் உதவியும் இன்றி, இணையதளம் வாயிலாக மனு தாக்கல் செய்து 10 நிமிடங்கள் அவர் முன்வைத்த தெளிவான வாதங்களை கேட்ட நீதிபதிகள் வியப்படைந்தனர்.

அரசியல் சாசனத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி அவருக்கு ஆதரவாக அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ‘தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்ற காரணத்தை கூறி தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்க முடியாது’ என்று தெரிவித்தனர். மேலும் 2025ம் முதல் 2026ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் படிப்பில் அதர்வாவிற்கு தற்காலிகமாக இடம் வழங்க ஒன்றிய அரசுக்கும் மற்றும் மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Jabalpur ,Adarva Chaturvedi ,Jabalpur, Madhya Pradesh ,
× RELATED மும்பையில் நடந்த சொத்து ஒப்பந்தம்;...