கவுகாத்தி: ‘காங்கிரஸ் எப்போதும் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்தது. ஊடுருவல்காரர்களை பாதுகாத்தது’ என அசாமில் பிரதமர் மோடி பேசினார். விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள வடகிழக்கு மாநிலமான அசாமில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்க ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்றார். கவுகாத்தி சென்ற பிரதமர் மோடி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ரூ.3,030 கோடி செலவில் கட்டப்பட்ட குமார் பாஸ்கர் வர்மா சேது பாலத்தை திறந்து வைத்து பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார். இதுதவிர, கவுகாத்தி ஐஐஎம்பில் கட்டப்பட்ட புதிய வளாகம், கம்ரூப்பில் அமின்கோனில் கட்டப்பட்ட புதிய தேசிய தரவு மையம், 225 பிஎம்-எலக்ட்ரிக் பேருந்துகள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் கவுகாத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜ தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: அசாமின் அடையாளத்தையும் அதன் மரபுகளையும் பாதுகாக்க பாஜ உறுதிபூண்டுள்ளது. காங்கிரஸ் 70 ஆண்டுகளில் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது 7 பாலங்களை மட்டுமே கட்டியது. ஆனால் பாஜ அரசு 10 ஆண்டுகளில் 5 பாலங்களை கட்டியது. பாஜ அரசின் முயற்சிகளால் அசாமில் முழுமையான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. அசாமில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், அது ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட மிகவும் ஆபத்தானது மாறியிருக்கிறது. அக்கட்சியின் தலைவ்கள் வெளியிட்ட விஷமத்தனமான அறிக்கைகளிலிருந்தே இது தெளிவாகிறது.
காங்கிரஸ் எப்போதும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அசாமில் அதன் ஆட்சியில் அச்சம், பாதுகாப்பின்மை நிலவியது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டது. அவற்றை ஊக்குவிக்கும் முடிவுகளை எடுத்தது. காங்கிரஸ் எப்போதும் வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்தது. அசாமில் கிளர்ச்சியை ஊக்குவித்தது. காங்கிரஸ் அதன் ஆட்சியில் ஊடுருவல்காரர்களை பாதுகாத்தது. ஆனால் பாஜ சட்டவிரோத குடியேற்றத்தை முடிவுக்கு கொண்டு வர உறுதிபூண்டுள்ளது. எனவே அடுத்த 5 ஆண்டுகள் அசாமுக்கு மிகவும் முக்கியம். சுதந்திர காலத்தில் முஸ்லிம் லீக் நாட்டைப் பிரித்துவிட்டது. இப்போது, இன்றைய காங்கிரஸ் ‘முஸ்லீம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ்’ ஆகிவிட்டது. அதனால் நீங்கள் காங்கிரசிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
* தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்
அசாமின் மோரன் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-37ல் 4.2 கிமீ தூரத்திற்கு போர் விமானங்கள் தரையிறங்கும் வகையில் ரூ.100 கோடி செலவில் அவசரகால இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள முதல் அவசரகால இறங்குதளம் இது. இதை திறந்து வைக்க பிரதமர் மோடி டெல்லியிலிருந்து சாபுவாவுக்கு சென்று அங்கிருந்து சி-130ஜே விமானப்படை விமானம் மூலம் மோரன் பகுதிக்கு சென்றார். பிரதமர் மோடி வந்த சி-130-ஜே விமானம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவசரகால இறங்குதளத்தில் தரையிறங்கியது. அங்கு பிரதமர் மோடியை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் வரவேற்றனர்.
* விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி
மோரன் பகுதியில் விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் போர் விமானங்களின் வான் சாகச கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சாகச கண்காட்சியில் சுகோய் 30 எம்கேஐ, ரபேல், ஏஎன்-32 ஹெலிகாப்டர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். ஏராளமான பொதுமக்களும் சாகச நிகழ்ச்சியை கண்டுகழித்தனர்.
