×

ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்காத விவகாரம் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர முடிவு: காங். தலைமையில் எதிர்க்கட்சிகள் அதிரடி

 

புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதிக்காததற்கும், 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததற்காகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வாரம், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய புத்தகத்தில் இருந்து சில தகவல்களை மேற்கோள் காட்டி பேச முயன்றார்.

கல்வான் மோதல் சமயத்தில் சீன பீரங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்த போது பிரதமர் மோடி முடிவெடுக்காமல் தனது பொறுப்பை தட்டிக் கழித்ததாக புத்தகத்தில் நரவனே குறிப்பிட்டுள்ள தகவலை ராகுல் காந்தி அவையில் கூற முயன்றார். இதை தடுத்த ஆளும் தரப்பு எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கடைசி வரை ராகுல் காந்திக்கு பேச அனுமதி தரப்படவில்லை. இதை கேள்வி கேட்ட காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்களை சபாநாயகர் ஓம்பிர்லா சஸ்பெண்ட் செய்தார். மேலும், பெண் எம்பிக்கள் மூலம் பிரதமர் மோடி மீது விரும்பத்தகாத செயல்கள் செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்ததாக சபாநாயகர் ஓம்பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இதனால் மக்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே ஜனாதிபதி உரை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் 2 நாள் வார விடுமுறைக்குப் பின் நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. அவை தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஆர்ஜேடி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஆர்எஸ்பி உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். இதில், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதிக்காதது, 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக மக்களவை சபாநாயகருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

அரசியலமைப்பு 94சி பிரிவின் கீழ் இந்த தீர்மானத்திற்கான அறிவிப்பு வழங்கப்படும் என்றும், இதுவரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த 103 எம்பிக்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதவி நீக்க தீர்மானத்தை எப்போது கொண்டு வருவது என்பது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, மக்களவையில் ஏற்பட்டுள்ள முடக்கத்திற்கு தீர்வு காண்பது தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று சபாநாயகர் ஓம்பிர்லாவை நேரில் சந்தித்து சில கோரிக்கைகள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் சபாநாயகரின் முடிவை பொறுத்து பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிகிறது. இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், மக்களவை சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் 4வது பதவி நீக்க தீர்மானமாக இருக்கும். இதற்கு முன், மக்களவையின் முதல் சபாநாயகரான ஜி.வி.மாவலங்கருக்கு எதிராக முதல் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அது தோற்கடிக்கப்பட்டது. பின்னர் சபாநாயகர் ஹுகும் சிங்குக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் போதிய பலம் இல்லாததால் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. 3வது தீர்மானம் சபாநாயகர் பல்ராம் ஜாக்கருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டது. அதுவும் தோற்கடிக்கப்பட்டது.

* எதிர்க்கட்சிகளுக்கு போதிய பலமில்லை

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று அளித்த பேட்டியில், ‘‘சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்குத் தேவையான பலம் அவர்களிடம் இல்லை. அரசு அவையை நடத்த விரும்புகிறது. எதிர்க்கட்சிகளுடன் பேச தயாராக இருக்கிறது. எம்பிக்களின் சஸ்பெண்ட்டை ரத்து செய்வது உட்பட 4 கோரிக்கைகளை ராகுல் காந்தி சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பில் ஆரம்பத்திலிருந்தே, இன்றும் கூட, அவை முறையாகச் செயல்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமளியை உருவாக்கி மற்றவர்களைப் பேச விடமாட்டார் என்ற சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. அது நடக்காது.

காங்கிரஸ் பேசினால், மற்ற உறுப்பினர்களும் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம். அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. ஜனாதிபதி உரையை போல பட்ஜெட் தீர்மானத்தையும் எங்களால் நிறைவேற்ற முடியும். எதையும் விவாதமின்றி நிறைவேற்ற பெரும்பான்மை உள்ளது. ஆனாலும் விவாதத்திற்கு பிறகுதான் நாடாளுமன்றத்தில் எதையும் நிறைவேற்ற விரும்புகிறோம்’’ என்றார்.

* பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்பி உரிமை மீறல் நோட்டீஸ்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் சமயத்தில், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் ஒப்பந்தம் குறித்த விவரங்களை ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அவைக்கு வெளியே வெளியிட்டதற்காக அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீசை திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அரசின் கொள்கை முடிவு குறித்த விவரங்களை அவைக்கு வெளியே தெரிவித்ததன் மூலம் அமைச்சர் கோயல் உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமைச்சர் கோயல் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அவையில் விளக்கம் அளித்து விட்டார் என்றும் இது குறித்து பின்னர் விசாரிப்பதாகவும் கூறினார்.

Tags : Congress ,Speaker ,Om Birla ,Rahul Gandhi ,President ,
× RELATED பிஎம் கேர்ஸ் நிதி விவகாரம் ரூ.6 ஆயிரம்...