புதுடெல்லி: இபிஎப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் நாடு முழுவதும் 8 கோடி ஊழியர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர். இந்நிலையில், யுபிஐ மூலமாக பிஎப் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் இபிஎப்ஓவின் புதிய செயலியை உருவாக்கி வருகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், அந்த செயலி மூலமாக யுபிஐ வாயிலாக பிஎப் பணத்தை எளிதாக எடுக்க முடியும் என்றும் ஒன்றிய அரசு வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செயலில் சந்தாதாரர்கள் தங்கள் பிஎப் பேலன்சில் அதிகபட்சமாக எவ்வளவு தொகையை எடுக்க முடியும் என்ற தகவலை பார்க்க முடியும். அதன் அடிப்படையில், பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட தங்கள் வங்கி கணக்கில் யுபிஐ மூலமாக அந்த பணத்தை பெற முடியும். இதற்கு யுபிஐ பின் நம்பர் மூலமாக இந்த பரிவர்த்தனையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். இதற்கான சோதனை முயற்சிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஒன்றிய தொழிலாளர் அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
