×

தொழில்நுட்பம் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்காதீர்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: மாணவர்கள் தொழில்நுட்பங்கள் தங்களை அடிமையாக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்வு எழுதும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியான பரிக்‌ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் பிரதமர் மோடி நேற்று பேசினார். கோயம்புத்தூர், ராய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் குஜராத்தில் வீடியோகான்பரன்ஸ் மூலம் நடந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி கூறியதாவது, ‘‘ குழந்தைகள் மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி இல்லாமல் சாப்பிடக்கூட முடியாத நிலையில் அந்த சாதனங்கள் அவர்களுக்கு எஜமானராகிவிட்டன. இதன் பொருள் நீங்கள் மொபைல்களுக்கு அடிமையாகிவிட்டீர்கள். தொழில்நுட்பம் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டீர்கள் என்று நீங்கள் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

தொழில்நுட்பங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாறாக அவற்றை உங்களது திறமைகளை மேம்படுத்தவும், ஆற்றலை வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு அல்லது மொபைல் போன்களை நம் எஜமானராக அனுமதிக்கக் கூடாது. நாம் செயற்கை நுண்ணறிவை திறமையாக பயன்படுத்தலாம். தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு முந்தைய வினாத்தாள்களை மாணவர்கள் பயிற்சி செய்ய வேண்டும். நல்ல உறக்கம் தேவை. தேர்வுகளுக்கு நன்றாக தயாரானப் பிறகு நீங்கள் ஒருபோதும் பதற்றமாக உணரமாட்டீர்கள். ஒரு நல்ல இரவு தூக்கம் தான் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்” என்றார்.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Pariksha ,Coimbatore ,Raipur ,Guwahati ,
× RELATED எஸ்ஐஆர் பணியில் இடையூறு ஏற்படுத்த...