புதுடெல்லி: இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக மக்களவையில் தனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முன்னாள் ராணுவ தளபதி நரவனே தனது புத்தகத்தில் பிரதமரையும் ராஜ்நாத் சிங் பற்றியும் தெளிவாக எழுதியுள்ளார். அது குறித்து ஒரு கட்டுரையில் வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரையில் இருந்ததைத்தான் மேற்கோள் காட்டுகிறேன். அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அது வெளிவந்தால், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உண்மை முகம் அம்பலமாகிவிடும். எல்லையில் சீனா நம் கண் எதிரே முன்னேறிக்கொண்டிருந்தபோது, 56 அங்குல மார்புக்கு என்ன ஆனது? என்பது தெரிந்து விடும்.
இந்த விவகாரத்தை பற்றி நான் வெறும் 2, 3 வரிகளை தான் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை பேச அனுமதிக்கவில்லை. இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்று நான் சொல்கிறேன். இவை நமது படைகளின் ஒரு முக்கியத் தலைவரான ராணுவத் தளபதியின் வார்த்தைகள். இது அவர் ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர மோடியுடன் நடத்திய உரையாடல். என்ன உத்தரவு பிறப்பித்தார்கள் என்பதைத்தான் நான் அவையில் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை? சீனாவிடம் இந்திய நிலம் இழக்கப்பட்டதா இல்லையா என்பது மற்றொரு விவகாரம். ஆனால், கல்வான் மோதலின் போது, பிரமதர் மோடியும், பாதுகாப்பு அமைச்சரும் என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். நாட்டின் தலைவர் என்பவர் இக்கட்டான தருணத்தில் வழிகாட்ட வேண்டும்.
அவர் முடிவெடுப்பதில் இருந்து ஓடி ஒளிந்து, மற்றவர்களின் தோள்களில் சுமத்தக்கூடாது. அதைத்தான் பிரதமர் மோடி செய்திருக்கிறார். இது ராணுவ தளபதியின் கூற்று. அவரது பார்வை. ராணுவத் தளபதி சொல்வதைக் கண்டு அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? அதிலிருந்து நாம் ஏதாவது தெரிந்து கொள்வோம் என்றா?. நிச்சயமாக, பிரதமரைப் பற்றி நாம் ஏதாவது தெரிந்து கொள்வோம். ராணுவத்தைப் பற்றியும், நாட்டின் அரசியல் தலைமை அவர்களையும் எப்படி கைவிட்டது என்பது பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
* ராகுலை மவுனமாக்க அரசு அவமதிக்கிறது
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் பதிவில், ‘‘மோடி அரசு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை அமைதியாக்க மூத்த அமைச்சர்களைப் பயன்படுத்தியதுடன் விதிகளையும் தவறாக பயன்படுத்தியது. இந்த போலி தேசியவாத அரசாங்கம், தங்கள் திறமையின்மையை பற்றிய உண்மை வெளிவருவதற்கு மிகவும் அஞ்சி எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை தடுப்பதற்காக பல மூத்த அமைச்சர்களை பணியில் அமர்த்தி உள்ளது’’ என கூறி உள்ளார்.
