புதுடெல்லி: மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிச்சுமை காரணமாகவும், எஸ்ஐஆர் விசாரணைக்கு அழைக்கப்படும் பொதுமக்கள் சிலர் அச்சம் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்வது நீடிக்கிறது.
இந்நிலையில் எஸ்ஐஆர் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்தித்து பேசுவதற்காக மம்தா பானர்ஜி டெல்லி சென்றிருந்தார். அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, நிர்வாகிகள் ஆகியோரும் சென்றுள்ளனர்.
பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மம்தா பானர்ஜி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். மேலும், மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்த 50 பேரையும் அவர் அழைத்து சென்றுள்ளார். டெல்லியில் மேற்குவங்க இல்லத்தில் மம்தா பானர்ஜி தங்கியுள்ள நிலையில், அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “எங்கள் வருகையை பார்த்து டெல்லி காவல்துறை பயப்படுகிறது. இங்கே எதற்காக இத்துணை காவல்துறையினர் உள்ளனர்? இவர்கள் டெல்லியில் குண்டு வெடிப்பு நடந்தபோது எங்கே போயிருந்தார்கள்?” என காட்டமாக தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “நான் டெல்லி அரசியலில் நீண்டகாலமாக இருக்கிறேன். 4 முறை ஒன்றிய அமைச்சராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். என் அரசியல் வாழ்க்கையில் இந்தளவுக்கு பொய் பேசும் ஒரு தலைமை தேர்தல் ஆணையரை நான் பார்த்ததே இல்லை. தலைமை தேர்தல் ஆணையர் ஒரு மிகப்பெரிய பொய்யர். மிகவும் ஆணவம் பிடித்தவர். பாஜவின் தூண்டுதல் காரணமாகவே மேற்குவங்கத்தில் பல லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பாஜவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” என ஆவேசமாக குற்றம்சாட்டினார்.
