பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடர்கிறது. இதில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசுகையில், ‘‘ 2030ம் ஆண்டுக்குள் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் ஒழுங்கு அமைப்பை வலுப்படுத்த, காவலர்களின் எண்ணிக்கை 1.21 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பீகாரில் பெண் காவலர்களின் சதவீதமும் அதிகமாக உள்ளது. பெண்கள் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்’’ என்றார். கால் விரலில் காயம் காரணமாக, எதிர்க்கட்சி தலைவரான ஆர்ஜேடியின் செயல் தலைவர் தேஜஸ்வி யாதவ் வீல் சேரில் வந்து சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
