புதுடெல்லி: சிங்கப்பூரின் ராணுவ பிரிவுடன் இந்தியாவின் ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான திகந்தரா இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த திகந்தரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், விண்வெளியை பாதுகாப்பானதாக மாற்றும் இலக்குடன் செயல்படும் இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் விண்வெளி குப்பைகளை கண்காணிக்கவும், விண்வெளி சொத்துக்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், திகந்தரா நிறுவனம் தற்போது சிங்கப்பூர் ராணுவத்தின் ஒரு பிரிவான சிங்கப்பூர் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விண்வெளி விழிப்புணர்வுக்கான கருவிகளை உருவாக்குவதற்கும், விண்வெளி குப்பைகளுடன் மோதல் ஏற்படுவதிலிருந்து சிங்கப்பூரின் தேசிய செயற்கைகோள்களை பாதுகாப்பதற்கும் சிங்கப்பூர் ராணுவ பிரிவுடன் திகந்தரா கைகோர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற விண்வெளி உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
