×

மக்கள் பணத்தை இழப்பதை தடுக்க பட்ஜெட்டில் முதலீட்டின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் ஒன்றிய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு உலகளாவிய நிச்சயமற்ற தன்மையே காரணம். பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன. இது, எந்த குறிப்பிட்ட கரன்சியின் மீதும் யாருக்கும் நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது. இதனால் தங்கத்தை வாங்குவதில் அவசரம் காட்டுகின்றனர். எப் அண்ட் ஓ எனப்படும் ஊக வணிகத்தில் பங்கு பரிவர்த்தனை மீதான வரி 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல, ஆப்ஷன்ஸ் பிரீமியம் பங்கு பரிவர்த்தனை வரி 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஊக வணிக வர்த்தகத்தில் மக்கள் கண்மூடித்தனமாக ஈடுபடுவதை தடுப்பதற்கான ஒரு நடவடிக்கை. செபி ஆய்வுகளின்படி, சில்லறை முதலீட்டாளர்களின் எப் அண்ட் ஓ பிரிவில் செய்யப்படும் வர்த்தகங்களில் 90 சதவீதத்திற்கும் மேல் இழப்புகளிலேயே முடிகிறது. பல பெற்றோர்களிடமிருந்தும் எனக்கு அழைப்புகள் வந்துள்ளன. அவர்கள் தங்களின் பிள்ளைகள் கடுமையாக பணத்தை இழப்பதாகவும் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். எனவே இந்த வரி உயர்வு எப் அண்ட் ஓ பிரிவில் மக்கள் கண்மூடித்தனமாக ஈடுபடுவதை தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nirmala Sitharaman ,New Delhi ,Finance Minister ,Union Budget ,Lok Sabha ,
× RELATED சீன ஆக்கிரமிப்பு குறித்த உரையை...