×

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதியை மீண்டும் சிறைக்கு அழைத்து வந்தபோது போதையில் இருந்ததால் பரபரப்பு

புதுச்சேரி, ஜன. 23: புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சதீஷ்(எ) மணிகண்டன். இவர், மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் கொலை, மணல் கடத்தல், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே, கடந்த 2020ம் ஆண்டு ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கொட்டா ரமேஷ்(40) என்பவர், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் நடைபயிற்சி சென்றபோது, ரவுடி சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், ரமேஷ் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்தனர். இவ்வழக்கில் ரவுடி சதீஷ் உள்பட 6 பேரை கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர், இக்கொலை வழக்கில் ரவுடி சதீஷூக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், மணல் கடத்தல் வழக்கில் சதீஷை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரியாங்குப்பம் போலீசார் 2 பேர் கடலூர் சிறையில் இருந்து புதுச்சேரி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், புதுவை நீதிமன்றத்தில் சதீஷை ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் கடலூர் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை கடலூர் மத்திய சிறை காவலர்கள் சோதனை செய்தபோது, சதீஷ் மதுபோதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சதீஷை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடலூர் சிறைத்துறை மூலம் புதுச்சேரி தெற்கு காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி தெற்கு எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன், ரவுடி சதீஷூக்கு பாதுகாப்புக்கு சென்ற காவலர்கள் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Puducherry ,Satish (A) Manikandan ,Ariyankuppam ,Rediyarpalayam… ,
× RELATED வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய 14 விதிகள்