- உடன்குடி அனல் மின் நிலையம்
- தூத்துக்குடி
- பிராந்திய செயலாளர்
- முரசு தமிழப்பன்
- தூத்துக்குடி கலெக்டர்
- திருச்செந்தூர் கோவில் கடற்கரை
- அமலினகர்
தூத்துக்குடி, ஜன. 21:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் அக்கட்சியினர், தூத்துக்குடி கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திருச்செந்தூர் கோயில் கடற்கரை, அமலிநகர் மீனவர் கிராம கடற்கரையும் கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.இதற்கு உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்வதற்காக கடலில் 10 கிமீ தொலைவில் பல லட்சம் டன் கரும்பாறைகளை கொண்டு சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டு உள்ளதே காரணமாகும். எனவே திருச்செந்தூர் கோயில் கடற்கரை மற்றும் அமலிநகர் கடற்கரையை பாதுகாக்க உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு கடல் வழியாக நிலக்கரி கொண்டுவரும் திட்டத்தை கைவிட்டு, தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும், உடன்குடி அருகே கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறங்குதளத்தை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா தலைமையில் புன்னக்காயல் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புன்னக்காயல் மீனவ கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புன்னக்காயல் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் தலைவர் காந்தி மள்ளர் அளித்துள்ள மனு: ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழ அரசடி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார்புரம், துப்பாஸ்பட்டி கிராமங்களுக்கு சொந்தமான அரசு மேய்ச்சல் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
