×

நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் 109 முறை யானை நடமாட்ட எச்சரிக்கை: மனித-வனவிலங்கு மோதல்கள் தடுப்பு

ஊட்டி: கூடலூர் நாடுகாணி தாவர மரபியல் பூங்காவில் உள்ள கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு 109 முறை எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் உள்ள கூடலூர், ஓவேலி, நாடுகாணி, பந்தலூர், சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி குடியிருப்புகள், விவசாய, நிலங்கள் மற்றும் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிர், உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளன.

இப்பகுதியில் ஆண்டுக்கு குறைந்தது 7ல் இருந்து 12க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி வந்துள்ளன.  காட்டு யானைகளால் மனித உயிர்கள் பலியாகுவதை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில், 50க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பணிபுரியும் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வந்தனர்.

இந்நிலையில் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில், நாடுகாணி வனச்சரகத்துக்குட்பட்ட ‘ஜீன்பூல் மரபியல்’ தோட்டத்தில், உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு மையம் கடந்த டிசம்பர் 20ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு கேமராக்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை கண்டறிந்து அந்தந்த பகுதி பொதுமக்களுக்கும், வனப்பணியாளர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதத்தில் சோதனைக்காக துவக்கப்பட்ட இந்த கட்டளை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நவம்பர் மாதத்தில் 28 எச்சரிக்கைகளும், டிசம்பர் மாதத்தில் 53 எச்சரிக்கைகளும், ஜனவரி மாதத்தில் இதுவரை 28 எச்சரிக்கைகளும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கிடைக்கும் எச்சரிக்கைகள் மூலம் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்படைந்து தங்களை முன்கூட்டியே பாதுகாத்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது: கூடலூர் வனக்கோட்டத்தில் மனித-விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மனித-விலங்கு மோதல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வனத்துறை முன்கள பணியாளர்களுடன் யானை விரட்டும் காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு குழு காவலர்கள் என மொத்தம் 120 தற்காலிக காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் 34 பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 12 இடங்களில் 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. மனித-வனவிலங்கு மோதல்கள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் எளிய முறையில் உதவி பெற மற்றும் தகவல் அளிக்க ஏதுவாக இத்திட்டத்தின் கீழ் இன்று கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் (1800-425-4353) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : 109 elephant movement warnings ,Nadukani Command and Control Center ,109 warnings ,Command and Control Center ,Nadukani Botanical Garden ,Gudalur ,Oveli ,Nadukani ,Pandalur ,Cherambadi ,Pidharkadu ,Gudalur Forest Reserve ,Nilgiris district… ,
× RELATED குளித்தலை அருகே ஸ்கூட்டி மீது தனியார்...