×

காப்பீட்டு திட்டத்தில் 1.45 கோடி பேர் பயன்

சென்னை: சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில் கூறியதாவது: சமூக நீதி நோக்குடன் மக்கள் நலன் நாடும் அரசாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு, மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சென்னை கிண்டியில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கைகள், 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடன் 6.66 சதுர அடி பரப்பில் ஒரு ஒப்புயர்வு மையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் நலன் காக்கும், உயிர் காக்கும் இந்த அரசின் பல திட்டங்கள் பாராட்டுக்குரியவை. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், பயனாளிகளுக்கான ஆண்டு வருவாய் ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு, ரூ.5 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2053 சிகிச்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளில் 6769 கோடி மதிப்பு காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48- திட்டத்தின் மூலம் விபத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நலம் பெற்றுள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2.51 கோடி பயனாளிகள் முதன் முறைச் சேவைகளை பெற்றுள்ளனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம், அவர்களுக்கு தொடர் கவனிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. நோய்களை தொடக்க நிலையில் கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்க உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 986 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயர் சிறப்பு மருத்துவச் சேவைகளை பெற்று பயனடைந்துள்ளனர்.

Tags : Chennai ,Governor ,Legislative ,Assembly ,Tamil Nadu government ,Kalaignar Centenary High School ,Guindy, Chennai… ,
× RELATED நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம்...