×

இருமொழி கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏற்காது: ஆளுநர் உரையில் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் வாசித்த உரையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட மும்மொழிப் பாடத்திட்டத்தை இந்த அரசு ஏற்கவில்லை. இதனால், தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் நிறுத்திவைக்கப்பட்ட போதும், அதனால் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டபோதும், ஒன்றிய அரசின் மும்மொழிப் பாடத்திட்டத்தை ஏற்பதில்லை என்பதை பல்வேறு தருணங்களில் இந்த அரசு தெளிவுபடுத்தி வந்துள்ளது. என்றுமே இருமொழிப் பாடத்திட்டம் என்பதே தமிழ்நாட்டின் கொள்கை என்பதை இந்த அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையில் உறுதியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 1968ம் ஆண்டு அண்ணா வகுத்து தந்த இருமொழிக் கல்வித் திட்டத்தினை நாம் நமது இரு கண்களைப் போல காத்து வருகிறோம். நம் உயிரோடும். உணர்வோடும் கலந்துள்ள செந்தமிழை காப்பதில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
எச்சூழ்நிலையிலும் இக்கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு ஏற்காது.

* இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து இம்மாமன்றம் பல்வேறு காலங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கையை மறைமுக இந்தி மொழித் திணிப்பாக மட்டுமே இவ்வரசு கருதுவதோடு, இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசை இவ்வரசு வலியுறுத்துகிறது.

* இவ்வகையில் உயர்தனிச் செம்மொழியின் பெருமையினை உலகறியச் செய்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் போராடிப் பாதுகாத்திடவும். தமிழ்மக்களின் பெருங்கனவை நிறைவேற்றிடவும் எந்நாளும் ஓயாது உழைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு உறுதி பூண்டுள்ளது குறித்து நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
இவ்வாறு உரையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிபந்தனைகள் பெருந்தடையாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் நிபந்தனைகள் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது வருமாறு:
* அரசுப் பணியாளர்களின் நலன் காப்பதில் எப்பொதும் அக்கறையுடன் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு, அவர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அவர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகவும், தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாகவும், அகவிலைப்படி உயர்வு மற்றும் ரூ.25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை உள்ளிட்ட அம்சங்களுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை’ அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதால் ஓய்வூதிய நிதியத்திற்கு முதற்கட்டமாக ஒருமுறை பங்களிப்பாக 13,000 கோடி ரூபாயும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக ரூ.11,000 கோடியும் தமிழ்நாடு அரசு வழங்கும். தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடியிலும் அரசுப் பணியாளர்களின் நலனைக் காத்திடும் பொருட்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை மனமாரப் பாரட்டுகிறேன்.

* ஒன்றிய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை அணுகி வருவதால், மாநில அரசிற்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கபட்டு வருவது கவலைக்குரியது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை ஒன்றிய அரசு விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெருந்தடைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், திட்டங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இது, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளது.

* மிக்ஜாம், பெஞ்சல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் தமிழ்நாடு பெரும் சேதத்தைச் சந்தித்த நேரங்களில் மாநிலத்தின் நிவாரண உதவிக் கோரிக்கைகளை முழுமையாக ஏற்காமல் சொற்பமான தொகையை விடுவித்தது ஏமாற்றம் தருகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ஆண்டுப் பணித் திட்டத்திற்கான தொகையை ஒன்றிய அரசு முழுமையாக விடுவிக்காமல் உள்ளது. ரூ.3.548 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காததன் காரணமாக, அத்திட்டங்களுக்குரிய முழுச் செலவையும் மாநில அரசே ஏற்றுள்ளது.

* சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களின் சீரமைப்பு காரணமாக மாநிலங்கள் பெருமளவிலான வரி வருவாய் இழப்பினைச் சந்தித்து வரும் வேளையில், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் கூடிய வரி வருவாயை மடைமாற்றும் வகையில், ஒன்றிய அரசானது மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை விதிப்பதைத் தவிர்த்திட அரசு வலியுறுத்துகிறது.

* நாடெங்கும் ஊரகப் பகுதிகளில் பல கோடி ஏழை எளியோருக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு ஊதிய வேலைகளை உறுதி செய்யும் ‘மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்’ அடிப்படை நோக்கத்தினை சிதைத்திடும் வகையில், வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம்-ஊரகம் என்ற புதிய திட்டத்தினை ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திடும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு போன்ற எண்ணற்ற பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாட்டிலேயே இத்திட்டச் செயலாக்கத்திற்கான விருதுகளை தமிழ்நாடு தொடர்ந்து பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உரையில் கூறப்பட்டுள்ளது.

Tags : K. Stalin ,Chennai ,Tamil ,Tamil Nadu ,EU government ,
× RELATED நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம்...