×

நிபந்தனையை மீறியதால் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய போலீஸ் வாதம்; விசாரணை அதிகாரியை கொலைகாரன் என்பதை ஏற்க முடியாது: யூடியூபர் சங்கர் மனு மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நிபந்தனைகளை மீறியதால் தான் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யுமாறு போலீஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை என்பது தொடர்பாக ஆதாரங்களுடன் வாதிட வேண்டும், அதைவிட்டு பிரதான வழக்கில் வாதிடக்கூடாது. மேலும் வெள்ளிக்கிழமை இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று யூடியூபர் சங்கர் வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூடியூபர் சங்கருக்கு தரப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, யூடியூபர் சங்கர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, செல்போன் கால், வாட்ஸ்அப் கால் மூலம் விசாரணை அதிகாரிகளை மிரட்டுகிறார். சாட்சிகளையும் மிரட்டுகிறார். விசாரணை அதிகாரியை கொலைகாரன் என்று திட்டியுள்ளார். மருத்துவ சிகிச்சை என்று சொல்லி இடைக்கால ஜாமீன் பெற்ற அவர் தொடர்ந்து யூடியூப் பதிவிடுகிறார். எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டு யூடியூபர் சங்கரின் சமீபத்திய வீடியோ பதிவுகளை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

இதை பார்த்த நீதிபதிகள், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக கண்டபடி மரியாதையில்லாமல் பேசலாமா, கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தலாமா, எனக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதையும் பேசலாமா, எப்படி ஒரு விசாரணை அதிகாரியை கொலைகாரன் என்று சொல்லலாம். இதேபோல் கொலைகார நீதிபதி என்று சொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம். பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது என்ன என்பதை முதலில் புரிந்து பேச வேண்டும். அவரது அம்மா மனுதாக்கல் செய்தார். ஆனால் பயன் பெறுவது யார், அவருக்கும் மனுதாரரான அவரது அம்மாவுக்கும் தொடர்பில்லை என்று எப்படி வாதிடலாம்.
உங்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. அதற்காக ஒரு விசாரணை அதிகாரியை கொலைகாரன் என்று எப்படி அழைக்கலாம், இதையெல்லாம் ஏற்க முடியாது.

அரசியலமைப்பு இதைத்தான் தந்துள்ளதா, அவரது அம்மா மகனுக்காக தானே வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் தானே இடைக்கால ஜாமீன் தரப்பட்டது. அவரது தாய் தான் மகனுக்கு இதுபோன்று அதிகாரிகளை பேசக்கூடாது என்று அறிவுரை சொல்ல வேண்டும். உங்களது ஆட்கொணர்வு மனு நிலுவையில்தான் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீன் தான் தரப்பட்டுள்ளது. அதற்காக இந்த நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறியதால் தான் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யுமாறு போலீஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளது. அந்த மனுவுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் தானே பதில்தர வேண்டும். ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை என்பது தொடர்பாக ஆதாரங்களுடன் வாதிட வேண்டும். அதைவிட்டு பிரதான வழக்கில் வாதிடக்கூடாது என கருத்து தெரிவித்து, வெள்ளிக்கிழமை இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மற்றொரு வழக்கு: சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த விவகாரம் தொடர்பாக யூடியூபர் சங்கர் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் நீங்கள் அங்கு சென்று முறையிடுங்கள். நாங்கள் இதில் தலையிட விரும்பவில்லை என்று உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Shankar ,Chennai ,
× RELATED நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம்...