×

ஜல் ஜீவன் திட்டத்துக்கான நிதியை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்

பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் அரசு தொடர்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற இலக்குடன் உயிர்நீர் இயக்கும் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் உள்ள ஒரு கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு இதுவரை குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இந்த இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது.

இவ்வளவு சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டிருப்பினும், தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்த விடுவிக்க வேண்டிய ரூ.3112 கோடி நிதியினை ஒன்றிய அரசானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுவிக்கவில்லை. மேலும் ஒரு புதிய திட்டத்துக்கும் அனுமதி அளித்திடவில்லை. எனவே மிகவும் முக்கியமான இத்திட்டத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு விரைவில் வழங்க வேண்டும்.

ரூ.8911 கோடியில் 20,485 கி.மீ. கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது: தமிழ்நாட்டில் ரூ.8911 கோடியில் 20,485 கி.மீ., தூர கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. பேரவையில் ஆளுநர் பேசிய உரையில் கூறியிருப்பதாவது:கிராம பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்திடவும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், வேளாண் விளை பொருட்களை நகரங்களுக்கு விரைவாக கொண்டு செல்லவும் கிராம சாலைகளை தரமாக அமைக்கப்படு மிகவும் அவசியம். இதை கருத்தில் கொண்ட இந்த அரசு முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.இத்திட்டத்தின் மூலம் கடந்த 2022-23ம் ஆண்டு முதல் தற்போது வரை 20,485 கி.மீ., நீளமுள்ள 15,412 சாலைகள் ரூ.8911 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கின்படி அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டை குடிசைகளே இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடன் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010ம் ஆண்டு கலைஞரால் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2030ம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு என்னும் இலக்குடன் கலைஞர் கனவு இல்ல திட்டம் அறிவிக்கப்பட்டது.இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் 8லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி, பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 2001ம் ஆண்டு வரை கட்டி தரப்பட்ட 1.16 லட்சம் வீடுகள் ரூ.1016 கோடி மதிப்பீட்டில் பழுது பார்க்கப்பட் புனரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்; 3 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி: பேரவையில் ஆளுநர் பேசிய உரையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தொழிலாளர் நலத்துறையின் மூலம் நடத்தப்பட்ட 2437 வேலைவாய்ப்பு முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேலான இளைஞர்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனங்களை பெற்றுள்ளனர். 2021ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசு தொழிற் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Union Government ,Jal ,Tamil Nadu ,Governor ,Union ,State Governments ,
× RELATED நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம்...