×

‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தால் மாதம் ரூ.888 வரை பெண்கள் சேமிப்பு

பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: பதவியேற்ற நாளன்றே முதல்வர் கையெழுத்திட்ட மகத்தான திட்டம் தான் ‘மகளிர் விடியல் பயணம்’, மகளிரின் பொருளாதார சுமையை குறைத்திடும் வகையில், கட்டணமில்லா பேருந்து போக்குவரத்துக்கு வழிவகுத்த அந்த ஒரு கையெழுத்தால், ஒரு பெண் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.888 வரை சேமிப்பதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்திடவும், அவர்களின் உரிமையை நிலைநாட்டும் உயரிய நோக்கத்துடனும் அறிமுகப்படுத்தப்பட்ட உயரிய திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இதன் மூலம் ஒரு கோடியே முப்பது லட்சம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமை தொகையாக பெறுகின்றனர். மகளிரின் சமூக பங்களிப்பினை அங்கீகரித்து அவர்களின் அவசியத் தேவைகளை நிறைவு செய்திட உதவும் இத்திட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக இதுவரை ரூ.33,464 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணிகளின் நலனுக்காக சென்னையில் ஹஜ் இல்லம் கட்டுமான பணிக்கு அடிக்கல்: சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை அவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஹஜ் பயணிகளின் நலனுக்காக சென்னையில் ரூ.39 கோடி மதிப்பில் ஹஜ் இல்லம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

ஜல் ஜீவன் திட்டத்துக்கான நிதியை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்: பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது:கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் வகையில் அரசு தொடர்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளின் பங்களிப்பில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற இலக்குடன் உயிர்நீர் இயக்கும் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் உள்ள ஒரு கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு இதுவரை குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இந்த இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது.இவ்வளவு சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டிருப்பினும், தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்த விடுவிக்க வேண்டிய ரூ.3112 கோடி நிதியினை ஒன்றிய அரசானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுவிக்கவில்லை. மேலும் ஒரு புதிய திட்டத்துக்கும் அனுமதி அளித்திடவில்லை. எனவே மிகவும் முக்கியமான இத்திட்டத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசு விரைவில் வழங்க வேண்டும்.

கலைஞரின் கனவு திட்டமான உழவர் சந்தை மூலம் தினசரி ரூ.10 கோடி விற்பனை: சூழலியல் வேளாண்மை நோக்கோடு உயிர்ம இயற்கை இடுபொருள் பயன்பாட்டையும் இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், ஒரு அரசுத் திட்டமாக மட்டுமன்றி ஒரு சூழலியல் இயக்கமாகவே மாறியுள்ளது. 125 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டு, புதிதாக 14 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு கலைஞரின் கனவுத் திட்டங்களில் ஒன்றான உழவர் சந்தை முன்பிருந்த எழுச்சியை மீண்டும் பெற்றுள்ளது. சராசரியாக, நாள்தோறும் 10 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெற்று எட்டாயிரம் விவசாயிகளும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோரும் பயன்பெறுகின்றனர். 397 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி, கடன் உத்தரவாதம், சிறப்பு அங்காடிகள், தொழில்நுட்பப் பயிற்சிகள், வேளாண் வணிகத் திருவிழா என்று பல்வேறு நிலைகளில் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட்டு வருகின்றன.

மகளிர் நலன், மேம்பாட்டிற்கான திட்டங்கள் மாநில நிதியில் இருந்து மட்டுமே செயல்படுத்தப்படுகிறது: ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது:
* தமிழ்நாடு அரசின் திட்டங்களில் முத்தாய்ப்பானதாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அமைந்தது என்றால், மகளிர் விடியல் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம், பத்திர பதிவில் பெண்களுக்கு கட்டண சலுகை என மகளிர் மேம்பாட்டிற்காக இந்த அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களை அடுக்கி கொண்டே செல்லலாம். இவ்வாறாக மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக இந்த அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களில் பெரும்பாலானவை மாநிலத்தின் சொந்த நிதியில் இருந்து மட்டுமே செயல்படுத்தப்படுபவை என்பதும் இந்த அரசிற்கு மேலும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

* தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பிற்கு இந்த அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. பாக் வளைகுடாவின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது, வழி தவறி இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய நேரிடும் நிகழ்வுகளில் சர்வதேச எல்லையைக் கடப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினரால், தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பின்னர், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் நடவடிக்கைகளால் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், இடைப்பட்ட காலத்தில் அவர்கள் சிறைவாசத்தை அனுபவிக்கும் நிலையும் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படாத நிலையும் நிலவுவதால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையான தீர்வை எட்டிடவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

Tags : Governor ,Chief Minister ,
× RELATED நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம்...