மதுரை, ஜன.5: தமிழ்நாடு அரசு இளைஞர்களின் கலை, இலக்கிய திறன்களை வளர்த்து கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு திறன் சார்ந்த போட்டிகளை நடத்தி வருகிறது. இவ்வகையில், தமிழ்நாடு அரசின் கல்லூரி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து இளைஞர்களுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடத்துகின்றன. அதன்படி, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில், வைகை இலக்கியத் திருவிழா போட்டிகள் இன்று (ஜன.5) துவங்குகிறது.
இப்போட்டிகள் வரும் ஜன.7ம் தேதி வரையில் மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, ஹைக்கூ போட்டி, இலக்கிய வினாடி வினா போட்டி, விவாத மேடை உள்ளிட்ட பத்து வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும்தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளாக ரூ.5000ம், ரூ.4000ம், ரூ.3000ம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
இதன்படி ஒட்டுமொத்தமாக 10 பிரிவுகளிலும் சேர்த்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவி எத்தனை போட்டிளில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
