தியாகதுருகம், ஜன. 7: தியாகதுருகம் அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் மகன் ஆனந்தகுமார் (24). இவரது மனைவி சந்தியா (22). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு சந்தியா பால் கொடுத்துவிட்டு படுக்க வைத்துள்ளார். பின்னர் சில மணி நேரம் கழித்து குழந்தை சத்தம் இல்லாமலும் எந்தவித அசைவு இல்லாமலும் படுத்திருப்பதை பார்த்து சந்தியா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரது கணவர் ஆனந்தகுமாரிடம் கூறியபோது இருவரும் குழந்தையை தட்டிப்பார்த்துள்ளனர். எந்தவித அசைவும் குழந்தையிடம் இல்லாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தையை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
