கள்ளக்குறிச்சி, ஜன. 7: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை மனைவி பிரியா (38). இவரது மகள் எம்ஆர்என் நகர் பகுதியில் உள்ள ஒரு டியூசன் சென்டரில் படித்து வருவதாகவும் மகளை அழைத்து வர நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தனது மொபட்டில் பிரியா சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென பிரியா கழுத்தில் இருந்த நகையை பறித்துள்ளனர். அப்போது பிரியா கழுத்தில் 6 பவுன் செயின் அணிந்து இருந்ததாகவும், மர்ம ஆசாமிகள் நகையை பறித்தபோது அவர் சுதாரித்துக்கொண்டு கழுத்தில் இருந்த நகையை கையில் பிடித்து கொண்டுள்ளார். இதனால் 2.25 பவுன் நகையை மட்டும் மர்ம ஆசாமிகள் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் மொபட்டில் இருந்து நிலைத்தடுமாறி விழுந்ததில் பிரியாவுக்கு கை மற்றும் கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சையத் உசேன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். மொபட்டில் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
