மதுரை, ஜன. 5: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாக, சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ளது செல்லத்தம்மன் கோயில். நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில் ஆண்டு தோறும்மார்கழி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா ஜன.11ம் தேதி கொடியோற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வரும் 18ம் தேதி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று மீனாட்சி, சுந்தரேசுவரர் வடக்குவாசல் செல்லத்தம்மன் கோயிலில் எழுந்தருள்கின்றனர். விழாவின் தொடர்ச்சியாக ஜன.19ம் தேதி சட்டத்தேரும், 20ம் தேதி மலர் சப்பர உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
