நாகர்கோவில், டிச.23: நீதிமன்றங்களில் இ பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் வக்கீல்கள் நேற்று 19வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் இ பைலிங் முறையை சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்தியுள்ளது. இதில், ஒரே நேரத்தில் பைலிங் செய்வதால் ஏற்படும் சர்வர் பிரச்னை உள்ளிட்ட தொழில் நுட்ப குளறுபடிகள் உள்ளதால், அவற்றை சரி செய்யும் வரை, இ பைலிங் முறையை அமல்படுத்தாமல் வழக்கமான பைலிங் முறையை பின்பற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று 19வது நாளாக குமரியில், நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை நீதிமன்றங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
