×

எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வை 4,566 பேர் எழுதினர்

தர்மபுரி, டிச.22: தர்மபுரி மாவட்டத்தில், 4 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எஸ்ஐ எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 4,566 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 1,688 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், காவல் உதவி ஆய்வாளர்(தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடித் தேர்வு, 2025ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான இணைய வழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 3ம் தேதி வரை நடந்தது. மொத்தமுள்ள 1,299 பணியிடங்களில் ஆண்களுக்கு 909 இடங்களும், பெண்களுக்கு 390 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகள் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். நேற்று நாடு முழுவதும் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் 4 மையங்களில் 6254 பேர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

காலை 10 மணிக்கு முதன்மை தேர்வு எழுதினர். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, தர்மபுரி விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நல்லம்பள்ளி விஜய் வித்யாலயா அறிவியல் கல்லூரி ஆகிய நான்கு மையங்களில், பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற தேர்வில் 4,566 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 1,688 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்குக் காலை 6 மணி முதலே தேர்வர்கள் வரத் தொடங்கினர். காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், தேர்வர்களைத் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே தேர்வறைக்குள் செல்ல அனுமதித்தனர்.

காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மைத் தேர்வும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதித்தேர்வும் நடந்தது. இத்தேர்வை கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் பலரும் ஆர்வமுடன் எழுதினர். தேர்வறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு மேல் வந்தவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வு மையங்களைச் சுற்றிப் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஈரோடு சத்தியமங்கலம் எஸ்டிஎப் ஐஜி மயில்வாகனன் தேர்வறைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி மையத்தில் 1475 பேர் தேர்வு எழுதினர். 525 பேர் தேர்வு எழுத வரவில்லை. தர்மபுரி விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில், 971 பேர் தேர்வு எழுதினர். 336 பேர் தேர்வு எழுத வரவில்லை. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 1018 பேர் தேர்வு எழுதினர். 429 பேர் தேர்வு எழுத வரவில்லை. நல்லம்பள்ளி விஜய் வித்யாலயா அறிவியல் கல்லூரி மையத்தில் 1102 பேர் தேர்வு எழுதினர். 398 பேர் தேர்வு எழுத வரவில்லை. விண்ணப்பித்த 6,254 பேரில் 4,566 பேர் தேர்வு எழுதினர். 1,688 பேர் தேர்வு எழுத வரவில்லை,’ என்றனர்.

Tags : SI ,Dharmapuri ,Tamil Nadu Uniformed Services Selection Board ,Police Assistance… ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...