×

வந்தே மாதரம் பாடல் விவாதத்தின் போது என்ன தைரியம் இருந்தால் இப்படி பேசுவீர்கள்?: எதிர்க்கட்சிகளை பார்த்து சீறிய ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தின்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கோபமடைந்து எச்சரித்தார். மக்களவையில் நேற்று ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான விவாதத்தின் போது ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘சுதந்திரப் போராட்டத்தின் போது மிகமுக்கிய வீரமுழக்கமாகத் திகழ்ந்த ‘வந்தே மாதரம்’ பாடல், ஜவஹர்லால் நேருவின் காலத்தில் இருந்தே வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவும் காங்கிரஸ் கட்சியால் துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டது.

புனிதமான இந்தப் பாடலின் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்ட வேண்டியது நமது தார்மீகக் கடமை. இந்தியர்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்துள்ள புனித உணர்வே ‘வந்தே மாதரம்’ என்ற பாடலாகும்’ என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், அவரைப் பேசவிடாமல் தடுத்து இருக்கையில் அமருமாறு குரல் எழுப்பினர். இதனால் நிதானம் இழந்த ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து கடும் சினத்துடன் ஆவேசமாகத் திரும்பினார்.

‘என்னை யாரால் உட்கார வைக்க முடியும்? என்ன தைரியம் இருந்தால் இப்படிப் பேசுவீர்கள்? என்ன பேச்சு பேசுகிறீர்கள்… அமைதியாக உட்காருங்கள்’ என்று ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்தார். மூத்த அமைச்சரான அவர் இவ்வாறு கோபப்பட்டதால் அவையில் பெரும் கூச்சலும் பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து நிலைமையை உணர்ந்த சபாநாயகர் ஓம் பிர்லா, உடனடியாகத் தலையிட்டு உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.

Tags : Rajnath Singh ,New Delhi ,Defence Minister ,Lok Sabha ,Union Defence Minister ,BJP… ,
× RELATED 101வது பிறந்தநாள் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி