×

செமி கண்டெக்டர் ஆலைக்கு ஒப்புதல் பெற்றதும் பாஜவுக்கு ரூ.758 கோடி நன்கொடை வாரி வழங்கிய டாடா குழுமம்: அதிர்ச்சி தகவல் அம்பலம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உள்நாட்டில் செமி கண்டக்டர் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் 3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது. இவற்றில் 2 ஆலைகள் டாடா குழுமத்தைச் சேர்ந்தவை. செமி கண்டெக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க ஒன்றிய அரசு மானியம் வழங்குகிறது. இதன்மூலம் டாடா குழுமத்தின் 2 ஆலைகளுக்கான மானியம் ரூ.44,203 கோடி.

அமைச்சரவை ஒப்புதல் அளித்து 4 வாரங்களுக்குப் பிறகு, டாடா குழுமம் பாஜவுக்கு ரூ.758 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் பாஜவுக்கு வழங்கப்பட்ட நன்கொடை. இதுவரை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2023-24 நிதியாண்டில் வழங்கப்பட்ட எந்தவொரு அரசியல் நன்கொடையையும் விட இது அதிகம்.

செமி கண்டெக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி மானியத்தை மேற்கண்ட திட்டம் மூலம் ஒன்றிய அரசு வழங்குகிறது. இதன்படி மூலதனச் செலவில் 50 சதவீதம் ஒன்றிய மானியமும், மாநில அரசுகளின் நிதி சலுகையும் கிடைக்கும். டாடா குழுமம் 2 ஆலைகளிலும் ரூ.1.18 லட்சம் கோடி முதலீடு செய்து 46,000 நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கும்.

அதன் முதலீட்டின் ஒரு பகுதி 50 சதவீதம் ஒன்றிய அரசின் மானியத்தால் ஈடுகட்டப்படுகிறது என அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த மானியம் மற்றும் ஆலை அனுமதிக்குப் பிறகுதான் மேற்கண்ட மானியம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், டாடா குழுமத்தின் 15 நிறுவனங்கள் 2024-25 நிதியாண்டில் சுமார் ரூ.915 கோடியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளாக வழங்கியுள்ளன.

அதிகபட்ச தொகையாக, டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.308 கோடியை வழங்கியது. டாடா குழுமம் மூலம் 2021 மற்றும் 2024க்கு இடையே அரசியல் கட்சிகளுக்கு எந்த ஒரு நன்கொடையும் வழங்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 2024ல்தான் ரூ.758 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 2023-24 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் ரூ.2,544 கோடியை மானியமாக பெற்றன. இதில் அதிகபட்சமாக அதாவது 88 சதவீத நன்கொடையான ரூ.2,244 கோடியை பாஜ பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சாலை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு திட்ட அனுமதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட்ட பிறகு நிறுவனங்களால் வழங்கப்பட்டவை. இந்த வரிசையில் டாடா குழுமம் அளித்த நன்கொடை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tata Group ,BJP ,Ambalam ,New Delhi ,Union government ,Modi ,
× RELATED அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்