×

டிரம்பை திருப்திப்படுத்த பிரதமர் முழுமையாக சரணடைந்து விட்டார்: காங். விமர்சனம்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பை முழுமையாக திருப்திப்படுவதற்காக பிரதமர் மோடி முழுவதுமாக அவரிடம் சரணடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பிரதமர் மோடியின் வர்த்தக முத்திரையான அரவணைப்பு ராஜதந்திரம் முழுமையாக வெளிப்பட்டது. இந்தியா-அமெரிக்க உறவுகள் இதற்கு முன் இவ்வளவு பிரகாசமாக தோன்றியது இல்லை. அதன் பிறகு உடனடியாக வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 2025ம் ஆண்டு மே 10ம் தேதி மாலை ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் முதல் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நிலைமைகள் மோசமடையத் தொடங்கின.

நேற்று (நேற்று முன்தினம் ) நள்ளிரவு மிக தாமதமாக அதிபர் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் வழங்கிய தகவல்களில் இருந்து பிரதமர் மோடி-2025ம் ஆண்டு மே 10ம் தேதி செய்தது போலவே முற்றிலும் சரணடைந்துவிட்டார் என்பது தெளிவாக தெரிகின்றது. அவர் நிச்சயமாக அதிபர் டிரம்பை சமாதானப்படுத்தி உள்ளார். இந்த துரதிஷ்டவசமான நிகழ்வுகளால் இந்தியா சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தங்களின் முழு விவரங்களும் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* டிரம்பின் எந்தெந்த நிபந்தனைக்கு பிரதமர் மோடி சம்மதித்துள்ளார்?
மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று பேசிய காங்கிரஸ் எம்பி ரஜனி அசோக்ராவ் பாட்டீல், ‘‘இந்தியா தனது விவசாயத்துறையை அமெரிக்காவுக்கு திறந்து விடப் போவதாக கூறப்படுகிறது. இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காமல், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் வாங்கும் என அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அப்படி என்றால், இந்தியா தனது நீண்டகால கூட்டாளியான ரஷ்யாவை கைவிடுமா? வர்த்தக ஒப்பந்தத்தில் டிரம்பின் எந்தெந்த நிபந்தனைகளுக்கு பிரதமர் மோடி சம்மதித்துள்ளார் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Trump ,Congress ,New Delhi ,Congress party ,Modi ,US ,President ,General Secretary ,Jairam Ramesh ,
× RELATED மட்டை பிடிக்க தெரியாதவர்களுக்கு...