புதுடெல்லி: மணிப்பூர் புதிய முதல்வராக கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டதும் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே தொடங்கிய இன வன்முறை கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த வன்முறையின் போது குறைந்தது 260 பேர் உயிரிழந்தனர். இதனால் 2025 பிப்.9 அன்று பா.ஜ முதல்வர் பிரேன்சிங் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு மீண்டும் பா.ஜ அரசு அமைக்க வேண்டும் என்று அந்த கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தனர்.
தற்போது அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சி பிப்.13ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பா.ஜவின் மத்திய பார்வையாளராக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் நியமிக்கப்பட்டாா். நேற்று அவரது தலைமையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மணிப்பூர் புதிய முதல்வராக ஒய். கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மணிப்பூர் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் கேம்சந்த் சிங் பெயர் அங்கீகரிக்கப்பட்டது.
இதையடுத்து ஒன்றிய அமைச்சரவை சார்பில் ஜனாதிபதி ஆட்சியை மணிப்பூரில் இருந்து விலக்க பரிந்துரை செய்யப்படும். அதை தொடர்ந்து மணிப்பூர் கவர்னர் அஜய்பல்லாவை சந்தித்து கேம்சந்த் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோருவார். விரைவில் அவர் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய அரசாங்கம் அமையும்போது, குக்கி இனத்தைச் சேர்ந்த பெண் தலைவரான நெம்சா கிப்கென் மணிப்பூரின் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்தன.
* பா.ஜ பலம் எவ்வளவு?
60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த 2022ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 32 இடங்களில் பா.ஜ வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் பா.ஜவில் இணைந்ததால் பா.ஜ பலம் தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது.
யார் இந்த புதிய முதல்வர்?
* மணிப்பூர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள யும்னம் கேம்சந்த் சிங் 62 வயதானவர். மெய்பீஸ் இனத்தைச் சேர்ந்தவர்.
* தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர். சிங்ஜமேய் தொகுதி எம்எல்ஏ.
* 2017 முதல் 2022 வரை மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகராகப் பணியாற்றினார்.
* 2022 முதல் 2025 வரை முதல்வர் பிரேன்சிங் ஆட்சியில் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
* டேக்வாண்டோ கிங்
டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர் யும்னம் கேம்சந்த்சிங். கடந்த ஆண்டு சீனாவின் சியோலில் உள்ள உலக பாரம்பரிய டேக்வாண்டோ கூட்டமைப்பால் வழங்கப்படும் பாரம்பரிய டேக்வாண்டோவில் 5வது டான் பிளாக் பெல்ட்டைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
