×

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகள் பலிகடா: 18% வரி குறைப்பு கொண்டாட்டமா, திண்டாட்டமா? டிரம்பின் அழுத்தத்திற்கு பிரதமர் மோடி பணிந்தாரா?

புதுடெல்லி: அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயத்துறை பலிகடாவாக மாறக்கூடும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை கொண்டாடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல, எரிசக்தி துறையிலும் அதிபர் டிரம்பின் அழுத்தத்திற்கு பிரதமர் மோடி பணிந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. கடந்த ஆண்டு, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகபட்சமான 50 சதவீத வரி விதித்தார்.

இதில் வர்த்தக பற்றாக்குறைக்காக 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி சரிவை சந்தித்தது. அதே சமயம், வரியை குறைக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்காவுடன் இந்தியா கடந்த 6 மாதமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலனாக, இந்தியாவுக்கான 50 சதவீத வரியை அமெரிக்கா 18 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளது.

நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி இடையேயான தொலைபேசி உரையாடலில் இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவிக்கப்பட்டது. இது இந்திய பொருளாதாரத்திற்கும், வணிகங்களுக்கும் பெரும் நிம்மதி தரும் செய்தியாக பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் ஜவுளி, தோல், ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கி உள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை ஆளும் பாஜ தலைவர்கள் வரவேற்கும் அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

குறிப்பாக, இந்திய விவசாயத்துறையும், விவசாயிகளும் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக அத்துறை வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர். இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிவாவதில் பெரும் தடையாக இருந்தது விவசாயம், பால் பொருட்கள் மற்றும் எரிசக்தி துறைகள்தான். இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயத்துறை இருப்பதால், அந்நிய விவசாய பொருட்களுக்கு இந்தியாவில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக வரி விதிக்கப்பட்டது. இது உள்ளூர் விவசாயிகளையும் அவர்களின் விளைபொருட்களையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை. அமெரிக்காவிடமும் இந்த விஷயத்தில் இந்தியா கறாராக இருந்தது.

ஆனால், இருதரப்பு வர்த்தகம் குறித்து அதிபர் டிரம்பின் பேச்சும், அமெரிக்க வேளாண் அமைச்சரின் பேச்சும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘‘அமெரிக்காவுக்கு எதிரான வரிகள் மற்றும் வரிகள் அல்லாத தடைகளை பூஜ்ஜியத்தை நோக்கி இந்தியா நகர்த்தி உள்ளது. அமெரிக்க உற்பத்தி பொருட்களை வாங்க பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவின் எரிபொருள், தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி இன்னும் பிற பொருட்கள் என மொத்தம் 500 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்ய உறுதி அளித்துள்ளார்’’ என கூறி உள்ளார்.

அமெரிக்க வேளாண் அமைச்சர் புரூக் ரோலின்ஸ் கூறுகையில், ‘‘அமெரிக்க விவசாயிகள் சார்பாக அதிபர் டிரம்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க வேளாண் பொருட்கள் அதிகளவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். மிகப்பெரிய சந்தையான இந்தியாவுக்கான ஏற்றுமதி மூலம் அமெரிக்க கிராமப்புறங்களிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும். தற்போது விவசாய துறையில் இந்தியாவுடன் வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக (ரூ.11,500 கோடி) உள்ளது. இது நீண்டகால வர்த்தகம் மூலம் இந்த வர்த்தக பற்றாக்குறை சரி செய்யப்படும்’’ என கூறி உள்ளார்.

டிரம்ப் கூறியது போல அமெரிக்க விவசாய பொருட்களுக்கான வரியை இந்தியா பூஜ்ஜியமாக்கினால் அது இந்திய விவசாயிகள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உள்நாட்டுச் சந்தைகளில் மலிவான, மானிய விலையில் வழங்கப்படும் சோளம், சோயாபீன் எண்ணெய் மற்றும் பால் பொருட்கள் போன்ற அமெரிக்க விவசாயப் பொருட்கள் நிரம்பி வழியக்கூடும். இதனால், சிறிய அளவிலான இந்திய விவசாயிகள் விலை அடிப்படையில் போட்டியிட சிரமப்பட நேரிடும். அமெரிக்க பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆப்பிள்களின் அதிக இறக்குமதி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் விவசாயிகளை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.

அமெரிக்கா நீண்ட காலமாக இந்தியாவின் பால் மற்றும் கோழிப் பண்ணை சந்தைகளில் நுழைவதற்கான வாய்ப்பை நாடி வருகிறது. மரபணு மாற்றமில்லாத சான்றிதழ் அல்லது கலாச்சாரத் தேவைகள் தொடர்பான விதிகளை இந்தியா தளர்த்தினால், அது லட்சக்கணக்கான சிறு பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். இதுதவிர, அமெரிக்கா மற்றும் வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க இந்தியா சம்மதித்திருப்பதாக டிரம்ப் கூறி உள்ளார். இதுவரையிலும் மலிவு விலை ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியதால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருந்தது. இதனால் எரிபொருட்களை அதிகவிலைக்கு அமெரிக்காவிடம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இதுவும் உள்நாட்டு பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

மேலும், 500 பில்லியன் டாலர் அதாவது ரூ.45 லட்சம் கோடிக்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் கூறி உள்ளார். இந்தியாவின் மொத்த பட்ஜெட்டே ரூ.53 லட்சம் கோடி மட்டுமே என்ற நிலையில் இதற்கான சாத்தியக்கூறுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரையிலும் இருதரப்பு ஒப்பந்தம் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. எரிபொருள், 500 பில்லியன் வர்த்தகம், விவசாயம் குறித்து இந்திய தரப்பிலும் எந்த விளக்கமும் தரவில்லை. அவை வெளியாகும் பட்சத்தில் மட்டுமே அமெரிக்கா உடனான இருதரப்பு ஒப்பந்தம் கொண்டாட்டத்திற்குரியதா இல்லையா என்பது தெரியவரும் என பொருளாதார நிபுணர்கள் கூறி உள்ளனர்.

இருதரப்பு வர்த்தகம்
* 2021-25 காலகட்டத்தில், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதமும், இறக்குமதியில் 6.22 சதவீதமும், இருதரப்பு வர்த்தகத்தில் 10.73 சதவீதமும் அமெரிக்காவின் பங்காக உள்ளது.
* 2024-25 நிதியாண்டில், இருதரப்பு வர்த்தகம் 186 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டது (86.5 பில்லியன் டாலர் ஏற்றுமதி மற்றும் 45.3 பில்லியன் டாலர் இறக்குமதி).
* அமெரிக்காவுடன், 2024-25 நிதியாண்டில் இந்தியா 41 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையை கொண்டிருந்தது (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு). இது 2023-24 நிதியாண்டில் 35.32 பில்லியன் டாலராகவும், 2022-23 நிதியாண்டில் 27.7 பில்லியன் டாலராகவும் இருந்தது.
* சேவைகள் துறையில், இந்தியா 28.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவைகளை ஏற்றுமதி, 25.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவைகளை இறக்குமதி செய்துள்ளது
* மொத்தத்தில், அமெரிக்காவுடன் இந்தியா சுமார் 44.4 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த வர்த்தக பற்றாக்குறையை கொண்டிருந்தது.

இந்தியாவின் ஏற்றுமதி
* மருந்து மற்றும் உயிரியல் பொருட்கள் (8.1 பில்லியன் டாலர்)
* தொலைத்தொடர்பு கருவிகள் (6.5 பில்லியன் டாலர்)
* விலைமதிப்பற்ற கற்கள் (5.3 பில்லியன் டாலர்)
* பெட்ரோலியப் பொருட்கள் (4.1 பில்லியன் டாலர்)
* வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் (2.8 பில்லியன் டாலர்)
* தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோக நகைகள் (3.2 பில்லியன் டாலர்)
* பருத்தி ஆயத்த ஆடைகள், துணைப் பொருட்கள் (2.8 பில்லியன் டாலர்)
* இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் (2.7 பில்லியன் டாலர்)

இந்தியாவின் இறக்குமதி
* கச்சா எண்ணெய் (4.5 பில்லியன் டாலர்)
* பெட்ரோலியப் பொருட்கள் (3.6 பில்லியன் டாலர்)
* நிலக்கரி, கோக் (3.4 பில்லியன் டாலர்)
* வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள் (2.6 பில்லியன் டாலர்)
* மின் இயந்திரங்கள் (1.4 பில்லியன் டாலர்)
* விமானங்கள், விண்கலங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் (1.3 பில்லியன் டாலர்)
* தங்கம் (1.3 பில்லியன் டாலர்)

* ஒப்பந்த விவரங்கள் எப்போது வெளியாகும்?
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க அரசின் நிர்வாக உத்தரவு வெளியிடப்படும். அதில் வரி விவகாரங்கள் குறித்து தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உத்தரவில் தான் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பது குறித்து விவரங்கள் இடம் பெற்றிருக்கும். எனவே அமெரிக்காவின் நிர்வாக உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்திய அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும்
அமெரிக்காவின் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதால் இந்திய அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும் என இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைப்பின் தேசிய தலைவர் பிரேம் கார்க் கூறுகையில், ‘‘தற்போது வரி குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகும். மேலும், 19 சதவீத வரி எதிர்கொள்ளும் தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற போட்டியாளர்களுக்கு இணையாக இந்தியாவை நிலைநிறுத்தும். 149 மில்லியன் மெட்ரிக் டன் சாதனை அளவிலான அரிசி உற்பத்தியுடன் இந்தியா இந்த பருவத்தில் நுழையும் நேரத்தில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரிகள் முன்பு 10 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டபோதும் அமெரிக்காவிற்கான அரிசி ஏற்றுமதி அதிகரித்தது. இது தொடர்ந்து அதிகரிக்கும்’’ என்றார்.

அமெரிக்கா அதிக வரி விதிக்கும் பொருட்கள்
* பால் பொருட்கள் – 188%
* பழங்கள் மற்றும் காய்கறிகள் – 132%
* காபி, தேநீர், கோகோ மற்றும் மசாலாப் பொருட்கள் – 53%
* தானியங்கள் மற்றும் உணவுத் தயாரிப்புகள் – 193%
* எண்ணெய் வித்துக்கள், கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் – 164%
* பானங்கள் மற்றும் புகையிலை – 150%
* தாதுக்கள் மற்றும் உலோகங்கள் – 187%
* ரசாயனங்கள் – 56 % போன்ற பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரிகளை விதிக்கிறது.

ஆதாயம் அடையும் துறைகள்
* ஆடை,
* தோல் மற்றும் தோல் அல்லாத காலணிகள்
* ரத்தினங்கள் மற்றும் நகைகள்
* தரைவிரிப்புகள்
* கைவினைப் பொருட்கள் இது போன்ற அதிக உழைப்பு தேவைப்படும் துறைகள் நன்மை பெறக்கூடும். அதிக வரிவிதிப்புகள் இந்த பொருட்களின் அமெரிக்க ஏற்றுமதிகளைப் பாதித்து வந்தன.
* அந்நிய முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* விவசாயம், பால் பொருட்கள் போன்ற துறைகளில் அமெரிக்காவின் நுழைவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Tags : US ,Modi ,Trump ,New Delhi ,President Trump ,
× RELATED மட்டை பிடிக்க தெரியாதவர்களுக்கு...