×

ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததால் மக்களவையில் அமளி 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்

புதுடெல்லி: கல்வான் மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி நரவனே புத்தக குறிப்புகளை பேச ராகுல் காந்திக்கு அனுமதி வழங்காததை கண்டித்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 8 எம்பிக்கள் மக்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் வரை அவர்கள் அவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவை, மாநிலங்களவைகளில் நடந்து வருகிறது.

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனேவின் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தின் சில குறிப்புகள் ஆங்கில இதழில் கட்டுரையாக வெளி வந்ததை வைத்து நேற்று முன்தினம் பேச முயன்றார். அந்த கட்டுரையில், கடந்த 2020ம் ஆண்டு கல்வானில் இந்தியா-சீனா மோதலின் போது, சீன படைகள் முன்னேறிய நிலையில், தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து அரசு மேலிடம் எந்த முடிவும் எடுக்காமல் ராணுவத்தின் மீது பாரத்தை சுமத்தியதாக நரவனே குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதைப் பற்றி ராகுல் பேச முயன்றதால் பாஜ எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக அமளி செய்து அவரை பேச விடாமல் தடுத்தனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை மீண்டும் அவை கூடிய போது, ராகுல் காந்தி மீண்டும் இவ்விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு பிறகு அவை தொடங்கியதும், ராகுல் விவகாரம், இந்தியா-அமெரிக்கா இருதரப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, சில எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்குள் நுழைந்து சபாநாயகர் இருக்கை நோக்கி காகிதங்களை கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. சிலர் மக்களவை செயலாளரின் மேஜை மீது எற முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, காங்கிரசின் 8 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கொண்டு வந்தார். இது கடும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பிக்கள் தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர் மற்றும் குர்ஜித் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், கிரண் குமார் ரெட்டி, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், பிரசாந்த் படோலே, டீன் குரியகோஸ் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் ஆகியோர் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் இருக்கையில் இருந்த திலீப் சைக்கியா அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* மாநிலங்களவையில் வெளிநடப்பு
மாநிலங்களவையில் இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த ஒப்பந்தத்தின் விவரங்களை ஒன்றிய அரசு வெளியிடக் கோரிய எதிர்க்கட்சி எம்பிக்கள், ஒப்பந்தத்தில் நாட்டின் நலன்கள் அடகு வைக்கப்படுவதாகக் கூறி கோஷமிட்டனர். அவைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், ‘‘அரசு அறிக்கை வெளியிடும்போது இதைப் பற்றி பேசலாம். அரசு விவாதிக்க தயாராக இருக்கிறது’’ என்றார். இதை ஏற்க மறுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை.

Tags : Congress ,CPI ,Lok ,Sabha ,Lok Sabha ,Rahul Gandhi ,New Delhi ,Naravane ,
× RELATED மட்டை பிடிக்க தெரியாதவர்களுக்கு...