×

திருவாரூர் மாவட்டத்தில் 5வது நாளாக மிதமான மழை

திருவாரூர்,நவ.22: வடகிழக்கு பருவமழையையொட்டி வங்ககடலில் உருவாகவுள்ள புயல் சின்னம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரான திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக காலை முதல் மாலை வரையில் விட்டுவிட்டு சாரல் மழையாக பெய்து வந்தது.

இந்நிலையில் 4வது நாளாக நேற்று முன்தினம் காலை முதல் மாலை 3 மணி வரையில் மிதமான வெயில் அடித்த நிலையில் அதன்பின்னர் மேகமூட்டம் ஏற்பட்டு மாவட்ட தலைநகரான திருவாரூரில் மாலை 4 மணி அளவில் மழை பெய்ய துவங்கிய நிலையில் தொடர்ந்து 5.30 மணி வரையில் ஒன்றரை மணி நேரத்திற்கு கனமழையாக பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்களும் மழையில் நனைந்தவாறு கடும் பாதிப்பிற்குள்ளாகினர். மேலும் குளிர்ந்த காற்று வீசிகொண்டே இருந்ததால் கடும் குளிர் காரணமாகவும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் 5வது நாளாக திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. மேலும் இந்த மழையானது சம்பா சாகுபடியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உகந்ததாக இருந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

 

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Chennai Meteorological Department ,Bay of Bengal ,
× RELATED ஏம்பல் பகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்