வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை பணி விரைவில் தொடங்கும்: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

சென்னை: வடசென்னையில் உள்ள கடற்கரை ஓரங்களில் புதிதாக நடைபாதை அமைக்கும் பணி, விரைவில் தொடங்கப்பட்ட உள்ளது, என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் நகரப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் பல்வேறு வகைகளில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும், இன்னும் வட சென்னை பகுதிகளான காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை. வடசென்னை பகுதியை பொறுத்தவரை சாலை வசதி பெரும் சிக்கலாக உள்ளது. குறுகிய சாலையில் பயணம் செய்வது சவாலானது. இதனால் போக்குவரத்தில் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது வடசென்னை பகுதி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இங்கு போதிய அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்புகளும் இல்லாத நிலை காணப்படுகிறது.
வடசென்னை மக்களின் நீண்ட கால கனவை நிஜமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வடசென்னை பகுதி மேம்பாட்டிற்காக ‘வடசென்னை வளர்ச்சி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அரசு உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கி 3 ஆண்டுகளில் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ேபருந்து நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வடசென்னையில் உள்ள ​காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த கடற்கரை ஓரங்களை சீரமைத்து, நடைபாதை அமைக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. இந்த நடைபாதை வடசென்னை கடற்கரையை ஒட்டி 5 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட உள்ளது. மேலும் கடல் உணவுகள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், சிற்ப தோட்டங்கள், நகர்ப்புற உடற்பயிற்சி கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த நடைபாதை அமைக்கும் பணி இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: காசிமேடு கடற்கரையோரம் இம்மாத இறுதிக்குள் (2 வாரங்களில்) புதிதாக நடைபாதை அமைக்கும் பணிகள் தொடங்கும். இப்பணிகள் நிறைவடைந்தால், காசிமேட்டில் இருந்து திருவொற்றியூருக்கு பொதுமக்கள் நடந்து செல்ல முடியும். போக்குவரத்து நெரிசல் மற்றும் குடியிருப்பு மக்கள் தொகை அடிப்படையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சில இடங்களில் உள்ள கட்டுமானங்களை வருவாய்த்துறையினர் விரைவில் அகற்றுவார்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பிறகு பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை பணி விரைவில் தொடங்கும்: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: