புதிய காங். காரிய கமிட்டி அமைப்பு: சசிதரூர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் புதிய காரிய கமிட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சோனியாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சசிதரூர் உள்ளிட்ட ஜி23 தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புதிய காரிய கமிட்டி குழுவை நேற்று அமைத்துள்ளார்.

கட்சியின் தேசிய தலைவராக கார்கே கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பதவியேற்ற பிறகு கட்சியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக காரிய கமிட்டியில் இளைய தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கட்சி மேலிடம் முடிவு செய்திருந்தது. அதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட புதிய காரிய கமிட்டியில் 39 உறுப்பினர்களும், 32 நிரந்தர அழைப்பாளர்களும், 13 சிறப்பு அழைப்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில், பொது உறுப்பினர்களில், சோனியா காந்தி தலைமை குறித்து கேள்வி எழுப்பிய 23 தலைவர்கள் கொண்ட ஜி23 குழுவில் இடம் பெற்றிருந்த சசிதரூர், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

பொது உறுப்பினர்களாக கார்கே, சோனியா, ராகுல், மன்மோகன் சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோணி, திக்விஜய் சிங், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோரும் பொது உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். மணிஷ் திவாரி, வீரப்ப மொய்லி ஆகியோர் நிரந்தர அழைப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். காங்கிரசில் காரிய கமிட்டியே கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற குழு என்பது குறிப்பிடத்தக்கது.

* காங்கிரசின் புதிய காரிய கமிட்டியில் மொத்தம் 84 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

* உறுப்பினர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* 84 உறுப்பினர்களில் 15 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் 6 பேர் பொது உறுப்பினர்களாகவும், 4 பேர் நிரந்தர அழைப்பாளர்களாகவும், 5 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் இடம் பெற்றுள்ளனர்.

* கடைசியாக காரிய கமிட்டி கடந்த 2020 செப்டம்பர் 11ல் மாற்றி அமைக்கப்பட்டது. மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள முதல் காரிய கமிட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

*தமிழக தலைவர்கள்
காரிய கமிட்டியின் 32 நிரந்தர அழைப்பாளர்கள் பட்டியலில் பொறுப்பாளர்களாக தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி, செல்லக்குமார் இடம் பெற்றுள்ளனர். பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் இனி காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிய காங். காரிய கமிட்டி அமைப்பு: சசிதரூர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: