கரைமேடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

*வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு ஊராட்சியின் வழியாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை இணைக்கும் விதமாக இருந்து வந்த பழமையான பரவனாறு பாலம் சேதமடைந்து பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வருகிறது. மேலும் பாலத்தின் மேல் உள்ள சாலை குண்டும், குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்த நிலையில், பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவைகள் சென்று வருகின்றன.

இப்பாலத்தில் விபத்துகள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிய போர்வெல் வாகனம் பரவனாற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஆண்டின் துவக்கத்தில் நெல் அறுவடை இயந்திரம் ஏற்றி சென்ற லாரி பாலத்தில் சிக்கி இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவ மழையின்போது நெய்வேலி என்எல்சியின் கரிவெட்டி எடுக்கும் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மழை வெள்ள நீரும் சேர்ந்து வெள்ளம் ஏற்பட்டு பாலத்தை மூழ்கடித்து சென்றதால் இரண்டு வாரங்கள் போக்குவரத்து முடங்கியது. அப்போது சாலை துண்டிக்கப்பட்டு 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அப்பகுதி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலை விரிவாக்க பணியை துவக்கிய நகாய் திட்ட அதிகாரிகள், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிவு பிரிவாக தனித்தனி காண்டிராக்டர்களிடம் ஒப்பந்தம் அளித்தனர். அதில் மருவாய்-பின்னலூர் வரை ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் பல இடங்களில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டிய பள்ளங்கள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

மருவாய்-கரைமேடு இடையே விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை இணைக்கும் பரவனாறு புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் துவங்கி ஆண்டு கணக்கில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு போக்குவரத்து துவங்கும் முன்பே இந்த புதிய பாலம் இடிந்து விழுந்தது. பின்னர் இடிந்து விழுந்த இடிபாடுகளை உடனடியாக அகற்றி மீண்டும் கட்டுமான பணிகளை துவங்கி சில மாதங்களாக நடைபெற்று பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.

இருந்த போதிலும் புதிய பாலத்தின் இரு திசைகளிலும் ஜல்லிகள் கொட்டி வைக்கப்பட்டு சமன்படுத்தப்படாமல் உள்ளதால் எம்.சாண்ட் மணல் புழுதி பறக்கின்ற நிலையில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், தாறுமாறாக பழைய பாலத்தின் வழியாக செல்லாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியே செல்கின்றன. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய பரவனாறு பாலத்தின் இருபுறமும் உள்ள சாலையை சீரமைத்து பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post கரைமேடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: