ஜூலை 01 தேசிய மருத்துவர் நாள்; தன்னலமற்று சேவையாற்றும் மருத்துவர்களைப் போற்றுவோம்: வைகோ வாழ்த்து

சென்னை: தேசிய மருத்துவர் நாளையொட்டி தன்னலமற்று சேவையாற்றும் மருத்துவர்களைப் போற்றுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சிறந்த முறையில் சேவையாற்றி வரும் மருத்துவர்களை தெய்வத்திற்கு இணையாக வைத்து மக்கள் பார்க்கின்றார்கள். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தங்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டு முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள் பணியாற்றியதை தேசிய மருத்துவர்கள் தினத்தில் நினைவு கூறுவது சமூகக் கடமையாகும்.

சரியான நேரத்தில் உணவு, ஒய்வு, உறக்கம் இல்லாமலும், குடும்ப உறவுகளுடன் நேரம் ஒதுக்க முடியாமலும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அனைவரும் திருவிழா, பண்டிகை, சுற்றுலா என்று மகிழ்ச்சியாக இருக்கும் போது, மருத்துவர்கள் மட்டும் மக்களின் நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இப்படிப் பல காரணங்களால் சராசரி மனித வாழ்க்கையைக் காட்டிலும் மருத்துவர்களின் ஆயுள் காலம் பத்து வயது குறைவாகவே இருக்கிறது என்று புள்ளி விவரம் கூறுவது கவலையளிப்பதாக இருக்கிறது. எனவே மருத்துவர்களின் சேவைகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பீகார் மாநிலம் பாட்னா அடுத்த பங்கிப்பூரில் 01.07.1882 ஆம் ஆண்டு பிறந்தவர் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்கள், அயராது படித்து மருத்துவப் பட்டம் பெற்று, தன்னலமற்ற மருத்துவ சேவைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். நாட்டு விடுதலைக்காக தேசப்பிதா மகாத்மா காந்தியுடன் இணைந்து போராடி, சிறை சென்றவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர். 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக சீரிய முறையில் பணியாற்றினார். எந்தச் சூழலிலும் தன்னுடைய மருத்துவ சேவை தடைபடாமல் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் சிகிச்சை அளித்து வந்தார்.

தனது இறுதிக் காலத்தில் மரணத்திற்கு பின்னால், தன் வசித்துவந்த வீட்டை மருத்துவமனையாக மாற்றி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசிடம் ஒப்படைத்தார். அரிதினும் அரிதாகத்தான் ஒரு சிலர் மட்டும் எந்த தேதியில் பிறந்தார்களோ அதே தேதியில் இயற்கை எய்துவார்கள். அதேபோன்றுதான் டாக்டர் பி.சி.ராய் அவர்கள் 01.07.1962 அன்று இயற்கை எய்தினார். அந்த மாமனிதரின் நினைவாக அவர் பிறந்த ஜுலை 1 தேசிய மருத்துவர்கள் தினமாக இந்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரின் மறைவுக்குப் பின்னால் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது. தன்னலமற்ற மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர்களுக்கு, 1976 முதல், டாக்டர் பி.சி. ராய் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஜூலை 01 தேசிய மருத்துவர் நாள்; தன்னலமற்று சேவையாற்றும் மருத்துவர்களைப் போற்றுவோம்: வைகோ வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: