முத்துப்பேட்டையில் தண்டவாள கடவு பாதையை அடைக்க முயற்சி

*பொதுமக்கள் முற்றுகையால் பணிகள் நிறுத்தம்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் சென்று வரும் ரயில்வே கடவு பாதையை அடைக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் நேற்று ஈடுபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன.முத்துப்பேட்டை ரயில் நிலையம் நூற்றாண்டு கடந்த பழமைவாய்ந்தது. இப்பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற தர்கா, பிரசித்திபெற்ற தில்லை ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள், லகூன் மற்றும் அலையாத்தி காடுகள் உள்ளிட்ட சுற்றுலாதலங்களால் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு ரயில் நிலையமாகும். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்து முக்கிய ரயில்கள் சென்று வருகின்றன.

முத்துப்பேட்டை ரயில் நிலையம் உருவான காலத்திலிருந்து ‘பி’ கிரேடாக இருந்து வந்தது. தற்போது, தரம் குறைக்கப்பட்டு ‘டி’ கிரேடாக தெற்கு ரயில்வே துறை மாற்றி உள்ளது. இதன் மூலம் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ரயில் நிலையமாகவும் செயல்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

அகல ரயில் பாதை அமைக்கும் போது ரயில் வழித்தடம் அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷனும் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அப்போது முத்துப்பேட்டை குண்டாங்குளம் வழியாக புதுமனை தெரு வந்து ரயில்வே தண்டவாளம் அருகே முடியும் சாலையில் சுற்றுபகுதியை சேர்ந்த மக்கள் வந்து பின்னர் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொய்யா தோப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் செல்வது வழக்கம்.

அதனால் இந்த பகுதியில் ஒரு சுரங்க பாதை அல்லது ஆளில்லா கடவுப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தெற்கு ரயில்வே நிர்வாகம் அதை செய்து கொடுக்கவில்லை. இந்நிலையில் விபத்துகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கடவுப் பாதையை அடைக்க ரயில்வே நிர்வாகம் பல முறை முயற்சி மேற்கொண்டது.
அப்போதெல்லாம், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று காலை ரயில்வே ஊழியர்கள் 10 பேர், சாலையை கருங்கல் தூண்களை கொண்டு அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்த்தில் ஈடுபட்டனர். மேலும் பணிகளை நிறுத்த வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், போலீசார் அங்கு கூடிய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்போது வேலையை நிறுத்துவது எனவும், திருச்சி ரயில்வே மண்டல மேலாளரை சந்தித்த பிறகு இந்த சாலையை அடைப்பது குறித்து முடிவு எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு சென்றனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும் கலைந்து சென்றனர்.

The post முத்துப்பேட்டையில் தண்டவாள கடவு பாதையை அடைக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: