ஆணையரை அவதூறாக பேசிய அதிமுகவினரை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு, ஆணையரை அவதூறாக பேசிய அதிமுகவினரை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருபவர் செந்தில்முருகன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம் மாநகராட்சியில் இருந்து பணயிடம் மாற்றம் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவினர் நினைவஞ்சலி செலுத்தினர். அப்போது, தங்களது கட்சி தலைவி பற்றி, அங்கு வந்த ஆணையர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிமுக பிரமுகரும், முன்னாள் நகராட்சி துணை தலைவருமான ஆர்.டி.சேகர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆணையர் செந்தில்முருகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது, அதிமுகவினர், ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாநகராட்சி ஆணையரை பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், அதிகாரி என்று பார்க்காமல் ஆணையரை அவதூறாக பேசிய அதிமுகவினரை கண்டித்து, மாநகராட்சி அனைத்து பிரிவு ஊழியர்களும் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு அலுவலர்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் அவதூறாக பேசி வருவதை வன்மையாக கண்டிப்பதாக கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, ‘போராட்டம் செய்ய நான் கூறவில்லை. அலுவலக ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் வேலை செய்ய வந்திருக்கிறோம். அந்த வேலையை மட்டும் செய்வோம்’ என்றார்.

 

The post ஆணையரை அவதூறாக பேசிய அதிமுகவினரை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: