ஊட்டி : தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் மலர் மூலிகை குணம் உடையது. செங்காந்தள் என்பது காந்தள் அல்லது கார்த்திகைப் பூ என்பதுபோன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகத் திகழ்வது மிகவும் சிறப்புக்குரியது. `Gloriosa Superba’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும் `கோல்ச்சிசின்’ என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்தப்பூ வேலிகளில் மட்டுமல்ல சாலையோரங்கள் மற்றும் காடுகளிலும் படர்ந்து வளரக்கூடியது. குறிப்பாக, மலைகள் மற்றும் சரிவுகளில் காணப்படும் இந்த மலர் அழகிய விரல்களைப் போலவும், சுடர்கள்போலவும் காட்சியளிக்கும். இந்த மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டம் கூடலூர் மலைத்தொடரில் அதிகளவு பூக்க துவங்கியுள்ளன. இதன் மலர் மொட்டாகி விரியும்போது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலும், மலரானதும் சிவப்பாகவும் காட்சி தருகிறது. தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும்.
இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வர்ணிப்பார்கள். தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி – தெப்பகாடு சாலை, சீகூர் சாலை ஓரங்களில் இந்த மலர்கள் மலர்ந்து உள்ளதை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரசித்து செல்கின்றனர். புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்கின்றனர்.
The post முதுமலை புலிகள் காப்பகம் சாலையோரங்களில் பூத்துள்ள செங்காந்தள் மலர்கள் appeared first on Dinakaran.
